முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

28 April 2020

முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

அன்னதானம் செய்திட வேண்டும், புண்ணியம் சேர்க்க வேண்டும், பூசை செய்திட வேண்டும், இறையருள் பெற்றிட வேண்டுமென்ற உணர்வு வருவதே பரப்பிரம்மம் முருகன் அளவிலாத கருணைக்கொண்டு அவனுக்கு அளித்திட்ட பிட்சையாகும். பிட்சைபெற்ற நாம் அருளாளன் முருகன் திருவடியை மனமுருகி பூசித்திட வேண்டுமே அன்றி பூசை செய்துவிட்டோம் அன்னதானம் செய்துவிட்டோம் என்று வியப்பது தன்னை வியந்து பாராட்டிக் கொள்வது இவை தம்மால் செய்யப்பட்டது, தனது ஆற்றலால், தனது பணத்தால், தனது உழைப்பால், தனது செயலால், தனது அறிவால் செய்தோம் என்று எண்ணுவதே தலைவன் அருள் அவன்பால் குறைகின்றது என்பதை உணர்த்துவதாகும்.
முருகன் போட்ட பிட்சையால் வாழும், பாவம் சூழ்ந்த மனிதவர்க்கம் நமக்கு ஏதோ போனால் போகிறது என்று அருட்பெருஞ்சோதி ஆண்டவன் முருகன் நமக்கு நல்லதை சொல்லித் தந்தான். பிரம்மாண்ட ஞானத்தில் அணுவளவே அன்னதானம் செய்தும் பூஜை செய்தும் தயவை அடையலாம் என்ற உண்மை, அதை தெரிந்து கொண்டு பெரிய பெரிய விஷயங்களை தெரிந்து கொண்டதாக எண்ணி சிலபேர்க்கு அன்னதானம் செய்துவிட்டு ஏதோ சிறிது பூசை செய்துவிட்டு பெரியதாக இறைவனை மகிழ்வித்து விட்டதாக மனதினுள் கற்பனை செய்து கொண்டு நான் அன்னதானம் செய்தேன், மனமுருகி பூசை செய்தேன், ஒன்றுமே நடக்கவில்லை என எதிர்பார்ப்பது மலையை உடைக்க சிறுகடுகை தெளித்துவிட்டு மலை உடையும் என எதிர்பார்ப்பதை போலானதாகும்.
அவனவன் செய்திட்ட பாவம்தான் எவ்வளவு எவ்வளவு. அவனவன் செய்திட்ட பாவச்சுமையின் அளவு கணக்கிலடங்காது. அவ்வளவு பாவச்சுமைகள் இருக்கும்போது சிறிதளவு புண்ணியம் செய்துவிட்டு சிறிதளவு பூசை செய்து விட்டு பெரும் பலனை எதிர்பார்ப்பது தவறு என்ற உண்மை உணர்வு முருகப்பெருமானை பூசை செய்வதால் வரும்.
உணர்வு வந்துமே ஆறுமுகன் திருவடியே கதியென்று பற்றினால் அன்றி நாம் செய்திட்ட பாவத்திலிருந்து விடுபட முடியாது என்றும் உடம்பை வளர்க்க உணவு உண்பதும் உடம்பின் நலன் பெற கழிவு நீக்கமும் அவசியமான கடவுளின் கட்டளை என்பதைப் போலவே. ஆன்ம பெருக்கம் ஆன்ம வளர்ச்சிக்கு புண்ணியமும் அருளும் தேவை என்பதினாலே அன்னதானம் செய்து புண்ணியம் பெருக்கி ஆன்மபலத்தையும் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி பூசித்து அவனருள் பெற்று ஆன்ம விளக்கம் பெறுதலும் நித்திய கடமைகள் என்ற உண்மை உணர்வு மிகுந்து அன்னதானமும் பூசைகளும் பிரதிபலன் எதிர்பாராது செய்திட வேண்டுமென்ற உள்ளுணர்வு மிகும்.

Share on:
Today News