முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

29 April 2020

முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

அன்னதானமும் பூசையும் ஆன்மலாபம் பெறுவதற்காக முருகப்பெருமானால் உமக்கு அளிக்கப்பட்ட அருள் பிட்சையாகும். அந்த அருள்பிட்சை பெற்றிட்ட நாம் ஞானத்தில் வெகுதொலைவு சென்றதாக கற்பனை பண்ணாமல் மேலும் மேலும் முருகன் திருவடியைப் பற்றிட வேண்டுமென்ற தன்னடக்கமும் நான் செய்ததோ என்றில்லாமல் ஆண்டவ உனது அருளால் சிறிது செய்தேன் ஏற்றருள் புரிவாய், நாயிற் கடையேனாகிய எமது பாவங்களையெல்லாம் ஒழித்து திருவடி பற்றிட அடியேன் எம்மை வழிநடத்துவாய் ஞானத்தலைவனே என்றே அவனது திருவடியைப் பற்றி உண்மை ஞானம் பெற தூண்டும் ஆறுமுகன் அருள்.
உணவு உண்பது உடம்பின் நித்திய கடமைகள் போல பூசை செய்வதும், அன்னதானம் செய்வதும் ஆன்ம நித்திய கடமை என்றே உணர்ந்து செய்திடும் பக்குவம் வரும்.
அவரவர் பசிக்கு ஏற்றார்போல உணவு உண்பது போல, அவரவர் தகுதிக்கேற்றார்போலதான், தானதருமங்கள் செய்திட முடியும் என்றும், பசிக்கு ஏற்றார் போலத்தான் உணவு உண்பதைப் போல பக்தியும் ஓரளவிற்குத்தான் செய்திட முடியும். அதைவிடுத்து ஓயாமல் பக்தி செய்கிறேன் பேர்வழி என்று தொடர்ந்து மனம் ஓய்ந்து போகுமளவிற்கு பக்தி என்ற பெயரில் பிடிவாதம் முரட்டுத்தனமும் கொண்டு செய்திட்டால் வெறுப்பு ஏற்படுமே அன்றி மனஉருக்கம் ஏற்படாது என்றும் உணர்வார்கள்.
ஞானம் பெறுதல் மிகமிக நீண்ட பயணம் அதில் பொறுமையாக, நிதானமாக, பார்த்து பார்த்து செல்ல வேண்டும். திக்கு தெரியாத காட்டில் நடப்பது போலாகும்.
நாம் எந்த நிலை உள்ளோம், நாம் செய்த பாவபுண்ணியம் எவ்வளவு? நாம் நல்ல வழியில் சென்று கொண்டுள்ளோமா? என்றெல்லாம் ஒன்றுமே நமக்கு தெரியாது. ஆதலால் மனதினுள் போட்டு குழப்பிக் கொள்ளாமல் முருகா உன்னடி சரணடைந்தேன். நான் சரணாகதி அடைந்தது உண்மையோ பொய்யோ தெரியாது. என்னை ஏற்றருள் புரிந்திடுங்கள். எம்மை வழிநடத்துங்கள் என்றே ஞானத்தலைவன் முருகன் திருவடியை இறுகப் பற்றிக் கொள்வதை தவிர வேறுவழியில்லை என்ற உணர்வினை அந்த முருகனே உணர்த்த உணரப்பெறுவார்கள்.
முருகா! முருகா! முருகா! என்றே மனம் உருகி அழைத்திடுங்கள் அழைத்த அக்கணமே வந்தருள் புரியும் முருகன் அருள் பெற்று முற்றுப்பெற விழையுங்கள்.

Share on:
Today News