முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

30 April 2020

முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

சாதாரண மனிதன் ஞானியாகுவதற்கு முதல் தடையாய் இருப்பது உயிர்க்கொலை செய்து அதன் மாமிசத்தை உண்டதால் வந்த பாவம்தான் என்ற உண்மையை உணர்ந்து உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவஉணவை மேற்கொண்டு ஞானம்பெற முருகன் திருவடியை பற்றிட வேண்டுமென்ற மனஉறுதி தோன்றும்.
இயற்கை மனிதனை தோற்றுவிக்கும்போதே அந்த மனிததேகத்தினை சைவஉணவிற்கு உகந்ததாகத்தான் தோற்றுவித்தது. அவனது செரிமான மண்டலத்தில்கூட மாமிசத்தை செரிப்பதற்கான எந்த சிறப்பு அமைப்பும் இல்லை. ஏனெனில் ஞானம் பெறுவதற்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பான இந்த மனித தேகத்தில் பாவம் சேர்ந்து விடலாகாது என்பதினாலேயே இயற்கை ஜீவதயவின் அருளைப் பெற ஏதுவாக சைவஉணவை மேற்கொண்டு சாந்தமனநிலை கொண்டு ஜீவதயவினால் ஒளிதேகம் பெற்றிடவே இந்த தேகத்தை சாந்த தேகமாக படைத்திட்டது.
ஆனால் இயற்கையின் கொடையை அதன் அற்புதம் உணரா மனிதன் சுவைக்கு அடிமையாகி உணவு தேடலில் ருசியின் தன்மைக்கு அடிமையாகி எளிமையாக கிடைக்கிறது, சத்தானதாக உள்ளது என கற்பனை செய்து மாமிசத்தை சாப்பிட ஆரம்பித்தான்.
என்றைக்கு மனிதன் உயிர்க்கொலை செய்து அதன் மாமிசத்தை சாப்பிட ஆரம்பித்தானோ அன்று வந்தது அவனது வினைத்தொடர்ச்சி. அன்று வந்தது அவனது அதீத பாவச்சுமை. அன்று வந்தது அறியாமையெனும் அதீத இருள். அன்று தான் இறைவனுடன் கொண்டிருந்த அற்புத தொடர்பு துண்டிக்கப்பட்டு அறியாமை எனும் இருளில் மூழ்கி ஒளிபொருந்திய தூய சாந்தஅறிவு மழுங்கி மிருக அறிவு ஓங்கி மும்மலக் குற்றத்துள் ஆழஆழ புதைந்தனன் மனிதன்.
அந்தோ பரிதாபம்! தான் என்ன செய்கின்றோம் என்றே அறியாமல், அறியாமையில் உழன்று உழன்று உயிர்க்கொலை செய்த பாவம் இன்றுவரை அவனை மீளவிடாமல் மீண்டும் மீண்டும் பாவத்தில் தான் தள்ளுகிறதே தவிர அவனை மீண்டு வரவிடவே இல்லை.

Share on:
Today News