News
APRIL 2025

குரு உபதேசம் 4375
முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
இவ்வுலகினிலே மனிதர்களை மனிதர்கள் ஆட்சி செய்து செய்து, ஏராளமான வகையிலே ஒருவரை ஒருவர் அதிகாரத்தாலும், பணபலத்தாலும், ஆள்படையின் துணையினாலும் அளவு கடந்த வகையிலே துன்பப்படுத்தி விட்ட காரணத்தாலே பண்புடையோரும், பக்தர்களும், பத்தினி பெண்டிரும், பஞ்சபராரிகளும் துன்பம் தாளாது மனதினுள் இறைவனை அழுது தொழுததினாலே, எல்லாம்வல்ல இறைவன் முருகப்பெருமான் மனமிரங்கி இவ்வுலகினில் வெகுவிரைவில் ஞானஆட்சியை ஞானிகள் தலைமையிலே அமைக்க இருக்கிறார் என்பதை அறியலாம்.
ஞானஆட்சியிலே ஜீவதயவே அடிப்படையாக இருக்கும் என்பதையும், இதுவரை அதிகாரத்தால், பணபலத்தால், ஆள்படை தைரியத்தால், பண்புள்ளோரை, பொதுமக்களை, பாட்டாளிகளை ஏமாற்றி பறித்த பொருளெல்லாம் பொதுசொத்து என்பதையும் அதை அவர்கள், தானே மனமுவந்து பொதுமக்களுக்கே தானமாகவோ தர்மமாகவோ செய்து, செய்த பாவத்திற்கு புண்ணியத்தைத் தேடிக்கொள்ள வேண்டும் என்பதையும், அவ்விதம் பொதுசொத்தை அபகரித்து விட்டு, அதை தாம் பெரிய அறிவாளி என்றே தமக்கு தாமே வியந்து, பாதுகாக்க நினைத்தால் வருகின்ற ஞானஆட்சி காலத்திலே அவர்களெல்லாம் அசுரர்களாக கருதப்பட்டு ஞானபண்டிதனால் தக்க தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதோடு அவர்கள் சேர்த்த பொருள் பொதுமக்களை தாமே சென்றடையுமாறு முருகப்பெருமான் மாற்றி விடுவார் என்பதையும் அறியலாம்.
மக்களின் வேண்டுகோள் மகா ஞானத்தலைவன் முருகப்பெருமானை எட்டி விட்டதையும், முருகன் இனி உலகினில் வெகுவிரைவில் தோன்றி பண்புடையோர் தலைமையிலே ஞானிகள் துணையுடனே இவ்வுலகையே ஒரு குடையின் கீழ் வழிநடத்தி ஆட்சி செய்ய போகிறான் என்பதையும் அறியலாம்.
