News
JULY 2025

குரு உபதேசம் 4471
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
மக்கள் ஆட்சி முடிந்து ஞானிகள் தலைமையில் கடவுள் ஆட்சி இவ்வுலகினில் இனி ஏற்பட போவதை தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு முருகனை வணங்குகிறார்களோ அவ்வளவு விரைவில் கடவுளாட்சி இவ்வுலகினில் அமையும் என்பதையும் அறியலாம்.
உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவ உணவை மேற்கொண்டு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து எல்லாம்வல்ல ஞானபண்டிதன் திருநாமங்களை “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவணபவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ நாமஜெபத்தினை காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் ஒரு தீபமேற்றி தீபத்தின் முன் அமர்ந்து பூஜைகள் செய்துவிட்டால், பூஜைசெய்வோர்களின் அளவினைப்பொறுத்து ஞானபண்டிதன் பூஜை செய்கின்ற அன்பர்களின் அழைப்பினை ஏற்று விரைந்து வந்து இவ்வுலகினில் கடவுளின் ஆட்சியை உறுதியாக உடன் அமைப்பான் என்பதை அறியலாம்.
கடவுளின் ஆட்சியிலே ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடுகள் இருக்காது. சமநீதி சமதர்மம் செழித்து ஓங்கும். மக்களை ஏமாற்றியவர்கள் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள், நீதிக்கு புறம்பாக நடக்க முடியாது, மக்கள் பணத்தை அபகரிக்க முடியாது, அரசின் சொத்துகள் மக்கள் சொத்தாகையால் பொது சொத்திற்கு இடையூறு செய்வோர் கடவுளின் கோபத்திற்கு ஆளாகி பாதிக்கப்படுவார்கள் என்பதையும் தெளிவாக அறியலாம்.
உலக மக்களே, ஞான ஆட்சி அமைக்க அழையுங்கள் ஆறுமுகப்பெருமானை. முருகனது ஆட்சி பூவுலகினில் ஏற்பட அனைவரும் செய்யுங்கள் சரவணஜோதி வழிபாட்டை, வழிபாடு உலகினில் பெருக பெருக முருகன் ஆட்சி விரைந்து இவ்வுலகினில் அமையும்.
