News
AUGUST 2025

குரு உபதேசம் 4480
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
இகவாழ்வாகிய இல்லறமாயினும் சரி, பரவாழ்வாகிய துறவறமானாலும் இன்னும் அநேகம் அநேகமான விவசாயம், மருத்துவம், தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சிகள், அரசியல், பதவிகள், பட்டங்கள் என எந்த துறையாயினும் சரி இவற்றில் வெற்றி பெற வேண்டுமாயின் இக்கலைகளுக்கும், அறிவிற்கும், வாழ்விற்கும் காரணமான தலைவனாய் இருந்து நம்மை வழி நடத்துபவன் முருகப்பெருமானே என்றும், முருகனருள் கூடினாலன்றி யாதொன்றிலும் வெற்றி பெறவோ, வெளிப்படவோ பிரகாசிக்கவோ முடியாது என்பதையும் அறியலாம். எல்லாவற்றிற்கும் மேலானதும் அனைத்தையும் தரவல்லதானதும், கிடைப்பதற்கரிய பெரும்பேறான ஞானவாழ்வையும் அளித்து நமது ஜென்மத்தைக் கடைத்தேற்றுவது ஞானத்தலைவன் முருகனே என்பதையும் அறியலாம்.
இப்பிரபஞ்சத்திலேயே சர்வவல்லமை பெற்றவன் முருகப்பெருமான்தான். அவனே எல்லா இயக்கங்களிலும் சார்ந்து வழிநடத்தி காக்கின்றான். சர்வவல்லமைமிக்க மாபெரும் ஆற்றல்மிக்க முருகப்பெருமானே ஞானத்திற்கும், இல்லறத்திற்கும், துறவிற்கும், யோகத்திற்கும் தலைவனாய் இருக்கின்றான். முருகப்பெருமானின் திருவடிகளை மனமுருகி பூஜித்து, முருகனது அருளைப் பெற்றால்தான் எது பாவம்? எது புண்ணியம்? என்பது நமது அறிவிற்கு புலப்படும். அதை விட்டுவிட்டு ஏட்டு கல்வியின் துணையால் தர்மம் அறியாது முயற்சி செய்தால் பாவபுண்ணியங்களைப் பற்றி அறியாது ஏதேதோ செய்து பெறுதற்கரிய இந்த மானுட பிறப்பின் நோக்கம் அறியாது வீணாக்கிவிடுவோம். முருகனது ஆசி பெறாவிட்டால் இல்லற வாழ்வையும் செம்மையாக வாழமுடியாது, துறவற வாழ்வையும் நெறிபட்டு வாழ முடியாது, வெற்றியும் பெற முடியாது.
ஆக முருகனது அருள் இருந்தாலன்றி எந்த செயலிலும் வெற்றி காண முடியாது என்பதை தெளிவாக உணரலாம்.
முருகனது அருளைப் பெற என்ன செய்ய வேண்டும். அதற்கு முதலில் உயிர்க்கொலை செய்து புலால் உண்கிற அசைவ உணவு பழக்கத்தை விட்டு விட்டு, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். தினம்தினம் மறவாமல் காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும் இரவு பத்து நிமிடமும் “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவணபவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ தவறாமல் முருகனது திருவடிகளை வணங்கி முடிந்தால் தீபமேற்றி வழிபட வேண்டும். ஜீவதயவுடைய முருகனது கருணையைப் பெற, மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்ய செய்ய, முருகனது அருள்பார்வைக்கு ஆளாகி எல்லா உண்மைகளையும் படிப்படியாக நம் அறிவினில் அறிந்து தெளிந்து கடைத்தேறலாம்.
