News
SEPTEMBER 2025

குரு உபதேசம் 4506
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
இக்காலம் கலிகாலத்தின் உச்சமான காலமாகும். இக்கலிகாலத்தின் உச்சத்திலே பத்தினி பெண்களும், பக்தரும், பண்புடையோரும், தொழிலாளர்களும், விவசாயிகளும், பஞ்சபராரிகள் என உள்ள அனைவர்களிலும் ஒரு சில பகுதியினர் மட்டுமே கலியுகத்தின் கொடுமைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் அநீதிக்கு துணையாய் நிற்பதினாலே அவர்களுக்கு பாதிப்புகள் வரவில்லை. உலகினில் எல்லோரும் கலியின் கொடுமையால் அவதிப்பட்டு அனைவரும் ஒன்றுகூடி எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா? என்றே இறைவனை பிரார்த்திக்கும் காலத்தில்தான் முருகப்பெருமான் தனது பேராற்றலை உலகினில் ஒரு நொடிப் பொழுதினில் வெளிப்படுத்தி அற்புதம் நிகழ்த்துவான். அப்படி உலக மக்கள் பெரும் பகுதியினர் அழைக்கும் வரை எல்லாம்வல்ல இயற்கை அனுமதி இல்லாததினால் நடக்கும் கொடுமைகளைக் கண்டும் முருகன் அமைதியாக இருக்க வேண்டிய கொடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும், மக்களில் பெரும்பகுதி முருகப்பெருமானை அழைக்கவில்லை என்பதாலும், தான்படும் துன்பத்திற்காக கடவுளை வழிபடாமல் துன்பம் தீர்க்க பாவச் செயலான உயிர்ப்பலியினை இடுவதாலும் முருகன் அமைதியாய் இருக்கிறான் என்பதையும் அறியலாம்.
