News
OCTOBER 2026
தினம் ஒரு அகவல் 570
பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில்
அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 570
பெருவெளி அதனைப் பெருஞ்சுக வெளியில்
அருள்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
பெருஞ்சுக வெளி – பேரானந்த வெளி
எல்லையற்ற மகா வெளியை (பெருவெளி), அதற்கும் மேலான பேரானந்தம் நிறைந்த பெருஞ்சுக வெளியில், திருவருள் மயமாக நிலைபெறும்படி வகுத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி !
குறிப்பு
மேற்கண்ட வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ள வெளிகளின் தன்மை யோக தத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தினால்,
கலைவெளி ( அறிவு வெளி )
இது அறிவு சார்ந்த வெளி எனப்படும். அதாவது, புத்தி, சித்தம் முதலிய அந்த கரணங்களால் பெறப்படும் நிலை. இது நூல்கள் மற்றும் சாத்திரங்கள் மூலம் இறைவனை புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஆரம்ப நிலை.
அலர்வெளி / சுத்த வெளி ( ஞான வெளி )
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் கலக்காத தூய்மையான நிலை. இது அறிவு விரிவடையத் தொடங்கும் நிலை. அருள் என்ற வெளிச்சம் ஆன்மாவின் மீது படரும் நிலை.
பரவெளி ( உயர்நிலை )
இந்த நிலையில் ஆன்மா யான் என்ற கர்வத்தை துறந்து தனது குறுகிய அடையாளங்களை துறந்து, பிரபஞ்ச உணர்வோடு இணைய தயாராகிறது.
பரம்பர வெளி ( மேலான நிலை )
இந்த நிலையில் ஆன்மா பிரபஞ்சத்தோடு இணைந்து உலாவத் தொடங்குகிறது. இந்த நிலையில்தான் இயற்கை கட்டுப்படத்தொடங்குகிறது.
பராபர வெளி ( சிவ–சக்தி நிலை )
இது அறிவு மற்றும் ஆற்றல் இணைந்த நிலையாகும். இந்த நிலையில் “நான் வேறு, இறைவன் வேறு” என்ற வேறுபாடு மறையத் தொடங்கும்.
பகர்பெருவெளி
ஆதி சக்தியான அருட்பெருஞ்ஜோதியை உணர்ந்து அடையத் தொடங்கும் நிலை. இந்த நிலையில் சித்த மலம் முழுவதுமாக நீக்கப்பட்டு, சொல்வதற்கு முடியாத ஆழ்ந்த மவுன நிலையில் ஆன்மா இருக்கிறது.
பெருஞ்சுக வெளி
ஆழ்ந்த மவுனத்தில் இருக்கும் ஆன்மா சொல்வதற்கரிய பேரானந்த நிலையை ஆன்மா அடைகிறது. இதுவே சித்தி நோக்கி பயணிக்கும் ஆன்மாவின் இறுதி நிலையாகும். இந்த நிலையானது மரணமில்லா பெருவாழ்வினைப் பெற்றுத் தருகிறது.


