News
OCTOBER 2022
குரு உபதேசம் – 3486
முருகனை வணங்கிட, ஆறுவகையான சைவங்களையும், அதன் தன்மையையும் அறிந்து அதை கடைப்பிடிப்பதற்கான சூழ்நிலை வாய்ப்புகள் அனைத்தையும் பெற்று, அதிவீர சைவத்திலே சென்று வீரசைவ வாழ்வை வாழ்ந்து, சைவத்தலைவன் முருகனது திருவடியை பற்றிடலாம். உயிர்களை வதைத்து சாப்பிடாது தாவர வர்க்கங்களை மட்டுமே உண்பது சைவமாகும். உப்பு சேர்த்து உண்பதும் சைவமாகும் ஆனால் சுவை கூட்டக் கூடிய உப்பு, புளி, காரம் என்ற தாவர உணவினையும் நீக்கி சுவையற்றதும் உடம்பினை வலுக்கூட்டி மும்மல சேட்டைகளை தூண்டக்கூடிய சுவைகளை நீக்கியும், உணர்வை தூண்டும் மசாலாக்களை அறவே ஒதுக்கியும் சுவையற்ற உணவினை உயிர் வாழ மட்டுமே உண்டு வாழ்வது வீரசைவமாகும். உயிர் வாழ உடம்பு வேண்டும். ஆதலின் உயிர் வாழ உடம்பை காத்தல் கடன் என்பதை கருத்திலே கொண்டு உடம்பை உயிரின் பொருட்டு வீழாது காப்பதே வீர சைவமாகும். உடம்பிற்கு உரம் ஏற்றிக் கொண்டு வாழ்வது வீரசைவம் அல்ல. உணர்விலே ஜீவதயவெனும் உணர்வை உரமாய் ஏற்றி ஆன்மலாபம் பெறுவதே வீரசைவமாகும் என்பதையும் உணர்ந்து கடைப்பிடித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.