News
APRIL 2023
குரு உபதேசம் – 3664
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
உடம்பே ஞானத்தை அடைய கருவியாகவும் காரண கருவியாகவும், காரிய கருவியாகவும் உள்ளதை அறியலாம். எந்த உடம்பு பல ஜென்மங்களாக தொடர்ந்து செய்திட்ட பாவங்களினால் ஞானம் அடைவது தடைபட்டதோ அந்த உடம்பின் துணை கொண்டே புண்ணியங்களை செய்ய செய்ய, தருமங்களை செய்யவும், சிந்தித்தும் அவரவர் கையால் கொடுத்தும் பழக பழக தீமைசெய்து பழகிய தேகம், நன்மை செய்ய பழகியதால் பாவம் ஒழிந்து புண்ணியம் பெருகும். புண்ணியம் பெருக பெருக மெய் அறிவு வேலை செய்யும், மெய் அறிவு வேலை செய்ய செய்ய உடம்பைப் பற்றியும், மாசைப் பற்றியும் அறிந்து மாசை நீக்கி மாசற்ற தேகத்தை முருகனருளால் பெறலாம். முருகனது அருளைப் பெற விரும்பினால் தினம் தினம் தவறாமல் “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ மந்திர ஜெப பூஜை செய்ய செய்ய அனைத்தும் விளங்கி நிற்பதோடு முருகனது கருணையால் சித்தி பெறலாம் என்பதையும் அறியலாம்.