News
SEPTEMBER 2024

குரு உபதேசம் – 4161
முருகனை வணங்கிட : ஞானவாழ்வை பெறவும், மரணமிலாப் பெருவாழ்வை பெறவும், மனிதனாய் பிறந்த அனைவருக்கும் வாய்ப்புகள் இருந்தும் அவர்களால் பெற முடியாமல் போனதற்கு காரணம் என்னவெனில் அவரவர் முன்ஜென்மங்களே உயிர்களை கொன்றதாலும், புலால் உண்டதாலும், பிறர் சொத்தை அபகரித்ததாலும், நன்றி மறந்ததாலும், வஞ்சனை செய்து ஏமாற்றியதாலும் இப்படி பலபல வழிகளிலே அவர்கள் செய்திட்ட பாவங்களெல்லாம் பாவவினைகளாக மாறி வாய்ப்பிருந்தும் ஞானத்தைப் பற்றியோ மரணமிலாப் பெருவாழ்வைப் பற்றியோ அறியவொட்டாமல் தடை செய்கிறது. அப்படியே அறிந்து கொண்டாலும் அந்த துறையில் அவன் முன்னேற நினைத்தபோது சந்தேகமாக மாறி அவனை வாட்டி வதைத்து முயற்சியிலிருந்து விலக செய்கிறது. அதையும் தாண்டி நெறி நிற்க மும்மலக்கசடை நீக்கிவிட்டால் ஞானவழி செல்லலாம் என்றும், அதற்கு யோக பயிற்சிகள் தேவை என்றும், தாயினும் மிக்க தயவுடைய முருகப்பெருமான்தான் இதற்கு தலைவன் என்றும் முருகனின் ஆசி இல்லாமல் யோகம் செய்யவோ ஞானமடையவோ முடியாது என்பதையும் அறியலாம்.
ஆயினும் அவன் செய்த பாவங்களே சந்தேகங்களை உண்டு பண்ணி அவனை முன்னேற விடாமல் தடுக்கிறது. ஆகவே உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து, மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து தினம் தினம் மறவாது முருகனின் திருநாமங்களை மந்திரமாக ஜெபிக்க ஜெபிக்க முன்செய்த வினைகளிலிருந்து சிறுக சிறுக விடுபட்டு முருகனருளால் யோக வாழ்வையும், ஞானவாழ்வையும் முடிவில் மரணமிலாப் பெருவாழ்வையும் பெறலாம் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
“ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்று காலை பத்து நிமிடமும் மாலை பத்து நிமிடமும் தினம் தினம் தவறாமல் முருகன் திருவடிகளைப் பற்றி பூஜிக்க வேண்டும்.
அறக்கடலாம் முருகனைப் போற்றிட
நிறைவான வாழ்வும் நிம்மதியும் உண்டு.
