News
OCTOBER 2024

குரு உபதேசம் – 4173
முருகனை வணங்கிட: சதானந்த நிலை நின்று அருட்பெருஞ்ஜோதி வடிவினனாகி எண்ணிலா கோடி பரந்து விரிந்து அருள் பிரகாசமாய் சொல்லொண்ணா பேரானந்த நிலை நின்று அருளும் முருகப்பெருமான் அமைதியுடன் பேரானந்த நிலை நின்று அருள் புரிகின்றனன்.
பேரானந்த நிலை நிற்கும் முருகனை அழைத்தாலன்றி நம்மீது அவன்தன் அருட்கண் பார்வை திரும்பாது.
இவ்வுலகினிலே உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு ஜீவதயவின் வழியில் தூய நெறி வழி நடந்து, எவ்வுயிருக்கும் தீங்கு நினையாது உள்ள மென்மையான உள்ளமும், யாருக்கும் இடையூறு செய்யாத எண்ணமும் உடைய பண்பாளர்களாய் தேவத்தன்மையோடு உள்ள பண்புடையோரும், பத்தினி பெண்டிரும், பக்தர்களும் சான்றோர்களும், பஞ்சபராரிகளும் அழைத்தால் அக்கணமே அருள் செய்வான் முருகன் என்றும், உயிர்க்கொலை செய்து புலால் உண்போரும், பிறருக்கு இடையூறு செய்வோரும், ஜீவதயவை மறந்தவரும், வன்மனம் உள்ளோரும், குணக்கேடுகள் உடையோரும், தீயஎண்ணம் உடையோருமான அசுரத்தன்மை உடையோர் எவ்வளவு அழைத்தாலும் முருகன் திரும்பான் எனவும் அறியலாம்.
ஆயினும் உலகம் இன்னும் கொடுமையான துன்பகதியில் இருப்பதற்கு காரணம் பண்புடையோரும், பத்தினி பெண்டிரும், பக்தர்களும், பஞ்சபராரிகளும், உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவநெறி நின்று ஜீவதயவு வழி நடந்து, நன்னெறி சென்று வாழ்ந்தபோதும் துன்பத்தில் சூழ்ந்துள்ளனர். ஆயின் அவர்கள் துன்பம் நீங்கவில்லை. ஏனெனில் இவர்கள் அனைவரும் ஆதிமூல சக்தியான அருட்பெருஞ்ஜோதி வடிவினனான முருகனிடத்து மனம் உருகி “முருகா முருகா முருகா” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ முருகன் திருநாமங்களை சொல்லி போதுமான அளவு அழைக்கவும் இல்லை, அழைத்து தாம் படும் துன்பங்களை தீர்த்திட வேண்டுகோள் வைக்கவும் இல்லை. அதை விடுத்து பண்புடையோரும் நம்பிக்கை இழந்து சிறுதெய்வ வழிபாட்டினில் செல்வதால்தான் இவ்வுலகினில் தர்மம் குலைந்து முருகன் தோன்றாதிருக்கிறான் என்பதையும் ஆதி ஞானத்தலைவன் முருகன் வழிபாடு குறைந்திருப்பதாலும் சிறுதெய்வ வழிபாடு மிகுந்திருப்பதாலும், உயிர்க்கொலை மிகுந்திருப்பதாலும், உலகினில் பாவசுமைகள் அளவு கடந்து ஏறியதால் தீய சக்திகளான அசுரசக்தியின் வேகம் கூடி நிற்பதாலே துன்பமயமான, மாமாயை சூழ்ந்த உலகமாய் மாறி கலியின் கொடும் பிடியுள் அகப்பட்டுள்ளது இவ்வுலகம்.
ஆதலின் பண்புடையோரும், பத்தினி பெண்டினரும், பக்தர்களும், சான்றோர்களும், பஞ்சபராரிகளும் “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ மனம் உருகி பிரார்த்தித்து முருகப்பெருமான் வெளிப்பட வேண்டும், உலகை காக்க வேண்டுமென்று வேண்டினால் உலகம் கடைத்தேறும் என்பதையும் அறியலாம்.
உருகியே முருகனை உண்மையாய் பூசிக்க
அருகிலே வந்து அருள்வான் உண்மையே.
காரணகுருவான கந்தனை போற்றுவோம்
வாரணக்கொடியானை வாழ்த்தி வணங்குவோம்.
எண்திசையும் போற்றும் நந்தீசனை போற்றுவோம்
இதமாய் அருளும் பதஞ்சலியை போற்றுவோம்
தருணத்தில் உதவிடும் அருணகிரிநாதனை போற்றுவோம்.
