News
OCTOBER 2024

குரு உபதேசம் – 4181
முருகப்பெருமானை வணங்கிட: எந்தெந்த வகையில் தொடர் பிறவி ஏற்படும் என்றும், அதற்கு காரணம் என்ன என்பதையும் அறிந்து நீக்கிக் கொள்ளலாம். நிலையில்லாத உடம்பை பெற்ற நாம் முருகன் அருளால் நிலையில்லாத உடம்பை நிலையான உடம்பாக உறுதிப்படுத்திக் கொள்ளும் வழியை அறியலாம். முருகப்பெருமான் திருவடியே வேதம் என்றும், அவன் நாமஜெபமே தவம் என்றும், அவனது நாமமே மந்திரம் என்றும், அவனது ஆசிபெறுவதே சிறப்பறிவு என்றும், அதில் வெற்றி பெறுவதே ஞானம் என்றும் அறிந்து கொள்ளலாம்.
காரண குருவான கந்தனைப் போற்றுவோம்
வாரண கொடியானை வாழ்த்தி வணங்குவோம்.
வளமான வாழ்வு வழங்கும் முருகனை
நலம் பெறவே போற்றி நாளும் தொழுவோம்.
ஒரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிர்களுக்கு தொண்டு செய்து உயிர்களை மகிழ்விக்க நினைப்பதுவே சிறப்பறிவாகும். அவ்வுயிர்களுக்கு தொண்டுகள் செய்து மகிழ்விப்பதே தவமாகும். உயிர்களின் மகிழ்ச்சியே சிறப்பறிவும், தவமும் என்பதை அறிவதற்கும், மகிழ்விப்பதற்கும் எல்லாம்வல்ல ஞானத்தலைவன் முருகப்பெருமான் ஆசி இருந்தாலன்றி அறிய இயலாது, செயல்பட முடியாது. ஆதலின் முருகன் அருள் கூடினாலன்றி சிறப்பறிவும் இல்லை, தவமும் இல்லை.
