News
DECEMBER 2024

குரு உபதேசம் 4248
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : போலி வேடதாரிகளின் இயல்பினையும், உண்மை ஆன்மீகவாதிகளின் இயல்பையும் உணர்த்துவான். போலி வேடதாரி தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாமல், தான் பாவியாவதோடு தன்னை நம்பிய தொண்டர்களையும் பாவியாக்குவான் என்பதையும், தன்னை நாடி வருகின்ற மக்களையும் பாவிகளாக்கி விடுவதையும், உண்மை ஆன்மீகவாதிகள் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதோடு தன்னை நம்பியுள்ள தொண்டர்களையும் காப்பாற்றி கடைத்தேற்றுவான் என்பதையும், தன்னை நாடி வருகின்ற அன்பர்களையும் காத்து இரட்சிப்பான் என்பதையும் அறிந்து சான்றோர்களாகிய உண்மை ஆன்மீகவாதியின் வழிநடந்திட நமக்கு முருகன் அருள்வான் என்பதையும் அறியலாம்.
முருகப்பெருமானை வணங்க வணங்க, அந்த முருகப்பெருமானே குருவின் வடிவினிலே தோன்றி நம்மை வழிநடத்தி, நம் அறிவைச் சார்ந்து, நமக்கு நல்வழிகாட்டி, நம்மைக் கடைத்தேற்றி ஞானமும் அருள்வான் என்பதையும் அறிவதோடு முருகனருள் இல்லையேல் ஞானமும் இல்லை, யோகமும் இல்லை, எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
தஞ்சமாம் முருகனின் தாளிணை போற்றிட
வஞ்சகம் இல்லை வாழ்வும் செம்மையே.
