News
JANUARY 2025

குரு உபதேசம் 4289
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
பத்தாம் வாசலாகிய புருவமத்தியை அறிந்து கொள்ள முருகப்பெருமானே அருள் செய்வான். பத்தாம் வாசலாகிய புருவமத்தியின் இரகசியத்தை அறிந்து கொள்ளவும் அந்த வாசலைத் திறந்து சென்று வெற்றி பெறவும் விரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு தினம் தினம் மறவாமல் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ முருகனது நாமங்களை நாமஜெபமாக மந்திர உரு ஏற்றி ஜெபித்து வரவேண்டும். குறைந்தது மாதம் இருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும்.
அடிப்படையான இந்த கொள்கைகளை தவறாது கடைப்பிடிக்க கடைப்பிடிக்க படிப்படியாக முருகனது அருள் அவர்தமக்கு கூடி, முருகனருளால் பத்தாம் வாசலாகிய புருவமத்தியின் இரகசியங்களை அறிந்து கொள்ளலாம்.
………………
தசமாம் வாசலை தானே அறிந்திட
விசமான உடம்பு வெந்தே வீழ்ந்திடும்.
புண்ணிய வள்ளலார் பொற்பதம் பூசிக்க
எண்ணிய அனைத்தும் எளிதில் சித்தியே.
சித்தியாம் வள்ளலார் திருவடி போற்றிட
முக்தியும் உண்டாம் முனையும் திறந்திடும்.
– அரங்கமகாதேசிகர்.
