News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4296
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
முருகப்பெருமானை ஒவ்வொருவரும் தினம் தினம் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் என தவறாமல் “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ மனம் உருகி பூஜிக்க பூஜிக்க, நாம் நம் சுவைக்காக பிற உயிர்களை கொன்று புசிப்பது பாவம் என்பதை உணரச் செய்து புலால் சுவையை நம்முள் மறக்க செய்து புலால் உண்ணும் பழக்கத்திலிருந்து விடுபடச் செய்து இதுவரை பாவியாக இருந்த நம்மை புண்ணியவான்களாக மாற்றிட வழிவகை செய்வான், அசைவ உணவிலிருந்து விடுபடச் செய்து சுத்த சைவ உணவை மேற்கொள்ள செய்வான்.
மனிதனின் அறிவை மயக்கும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபடச் செய்வான். நமது அறிவைச் சார்ந்து மதுவின் கொடுமைகளிலிருந்து நம்மை மீட்பான் முருகப்பெருமான்.
நாம் வசதியாக வாழ பிறர் பொருளை அபகரிப்பது பாவம் என்ற உண்மையை உணர்த்தி நாம் நமக்கு விதிக்கப்பட்ட நெறிப்பட்ட வாழ்வில்தான் வாழ வேண்டும் என்ற உண்மை வாழ்வை வாழ, வைராக்கியத்தை அளிப்பதோடு அதற்குரிய சூழ்நிலைகளையும் அமைத்து தருவான் முருகப்பெருமான்.
மேலும் இதுவரை இச்செயல்களை செய்து பாவிகளாகிவிட்டாலும் நாமும் கடைத்தேற வாய்ப்புள்ளதை உணர்த்தி எந்த ஜீவர்களுக்கு கெடுதல் செய்ததினால் இயற்கையின் கோபத்திற்கு ஆளானோமோ அந்த இயற்கையை மகிழ்விக்க அதன் கூறுகளாய் விளங்கி நிற்கின்ற உலக உயிர்களை தம்முயிர் போல் எண்ணுகின்ற ஜீவ தயவை நம்முள் வளர்த்து அவ்வுயிர் படுகின்ற துன்பத்திற்கு மனமிரங்கி உதவி புரிகின்ற மனப்பக்குவத்தையும், ஜீவ தயவையும் நம்முள் புகுத்தி பசித்த உயிர்களுக்கு பசியாற்றுவிக்கின்ற பரோபகார ஜீவதயவினை வளர்த்தி பசியாற்றுவிக்க ஏதுவான சூழ்நிலைகளை வணங்குவோர்க்கு அளித்து அவர்தம்மை பாவ வினைகளிலிருந்து மீட்பதோடு மனிதர்களால் ஏற்பட்ட இயற்கை மாற்றங்களை அந்த மனிதர்களைக் கொண்டே சரிசெய்து அற்புதமான ஞான உலகைப் படைப்பான் முருகப்பெருமான் என்பதையும் அறியலாம்.
