News
MARCH 2025

குரு உபதேசம் 4342
முருகப்பெருமான் திருவடிப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்களுக்கு தயவுகாட்டி நன்மைகள் செய்ய செய்ய நன்மை பெற்ற உயிரினங்களின் மகிழ்ச்சியே நன்மை செய்தோருக்கு அறிவாக மாறி அதாவது தயவே அறிவாக மாறி மேலும் மேலும் வளர்ச்சி பெறுகிறது. தயவு பெருக பெருக அந்த அறிவே சிறப்பறிவாகிறது. தயவு மேலும் மேலும் மேலும் பெருகிட சிறப்பறிவு கூடி பிறப்பு, வாழ்தல், முதுமையடைதல், தளர்ச்சியடைதல், இறத்தல் என்பவையும் அவற்றினிடையே உள்ள தொடர்பும், அதன் சூட்சுமமும் தெளிவாக தெரிவதோடு தான் யார்? ஏன் பிறந்தோம்? ஏன் வளர்கிறோம்? ஏன் முதுமையடைகிறோம்? ஏன் சாகிறோம்? இதிலிருந்து எப்படி விடுபடுவது என்கின்ற, தன்னை அறிகின்ற தகைமை பெறுகிறான்.
தயவு பெருக பெருக, தன்னையறியும் தகைமையை பெற பெற, தானே தலைவனாய், தலைவனே தானாய் ஆகி நிற்பதையும் உணர்கிறான். தயவு பெருக பெருக சிந்தை, சொல், செயலாய் தயவுமிக்கோனாகி, தன்னை மறந்து எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி எல்லா உயிர்களையும் இன்புற்று வாழ்வதற்காக தன்னை அர்ப்பணிக்கிறான். எல்லா உயிரும் இன்புற இன்புற தலைவன் வெளிப்படுகிறான். அவனது சிந்தையிலே அறம், சொல்லிலே அறம், செயலிலே அறம் ஆகிய கடைப்பிடிக்க அவனது அனைத்தும் தயவே வடிவாகி நிற்கும்.
எவ்வுயிரையும் இன்புற்று வாழ நினைப்பதே சிந்தை அறம் என்றும், தம்மால் முடிந்த வகையிலே பிற உயிர் பயன்பட வாழ்வது செயலிலே அறம், தலைவன் பெருமை உரைக்கும் அரிய நூல் பல கற்று, தான் உணர்ந்த தலைவன் பெருமையை பேசி, பிறரும் தலைவன் திருவடி பற்ற செய்வது சொல்லிலே அறம் என சதா சர்வ காலமும் தலைவன் சிந்தையாக இருக்க இருக்க எல்லா உயிர்களுள்ளும் தாம் கலந்திருப்பதை உணர்கிறான்.
தலைவனை உணர உணர, அவனது செயல் யாவும் தலைவன் செயலாகின்றது. அறமே தயவாய், தயவே அறமாய் உள்ளதை உணர்ந்து அறம் செய்தலையே தொழிலாய், தவமாய் ஆக்கி கொள்கிறான். அறமாகிய தொழிலை தவமாக செய்ய செய்ய சிந்தை, சொல், செயல், பார்வை, கேட்டல், செயல்படுதல், சொல்லுதல் என அனைத்து செயல்களுமே அறமாக விளங்கி நிற்க ஜீவதயவின் மொத்த வடிவமாக மாறி நின்று ஜீவதயவு பெருக பெருக, ஜீவதயவாகிய ஞானவீட்டின் திறவுகோலால் ஞானவீடும் திறந்து ஞானம் என்கிற பெறுதற்கரிய பெரு நிலையை அடைந்து தானும் தலைவனும் ஒன்றாகின்றான்.
அதை விடுத்து அறம் அல்லாத ஜீவதயவு இல்லாத செயல்களை செய்ய செய்ய, அவன் பாவியாகிறான். அவன் செய்கின்ற பாவத்தின் சுமை ஏற ஏற தன்னை மறக்கிறான், தலைவனை மறக்கிறான், தயவை மறக்கிறான், அறம் மறக்கிறான், எல்லா உயிர்க்கும் தீங்கு நினைக்கிறான். இப்படி பாவங்கள் சேர சேர அவன் தனக்கு கிடைத்த இந்த அற்புத மானுட பிறப்பின் இரகசியம் மறந்து தன்மை மறந்து மானுட பிறப்பினின்று தாழ்ந்து கீழ்நிலை பிறப்பாக போகிறான்.
இப்படிப்பட்ட நிலை ஏற்படாதிருக்க அறம் வளர்க்கும் சற்குரு நாதருடைய துணையும், சொற்குரு நாதருடைய துணையும் இல்லாவிடில் அறம் மறந்து பாவியாகிவிடுவோம் என்பதை உணர்ந்து, எல்லா பாவங்களையும் போக்கி நம்மை காக்கவல்ல ஒரே தலைவன் ஞானபண்டிதன் அருட்ஜோதி பிரகாச அருள் வள்ளல், சதகோடி சூர்யபிரகாசமுள்ள முருகப்பெருமானை வணங்க வணங்கத்தான் பாவ புண்ணியம் பற்றியும் அறிந்து அறத்தின் வழி சென்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியும் என்பதையும் அறியலாம்.
……………..
அருந்தவ முருகனின் அருளினை போற்றிட
இருவினையும் இல்லை இன்பம் உண்டாம்.
