News
APRIL 2025

குரு உபதேசம் 4364
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
இனி பிறவா மார்க்கமாகிய மரணமிலாப் பெருவாழ்வின் ரகசியத்தை அறியலாம். தொடர்பிறவிக்கு காரணமாய் இருப்பது உடம்பா? உயிரா? என ஆராய்ந்து பார்க்கும் போது உடல் மாசு காரணமாகத்தான் உயிர் மாசுபடுகிறது. உடல் மாசு நீங்கினால் உயிர் மாசு நீங்கும். உடல்மாசும் உயிர்மாசும் நீங்கி இனி பிறவாமையை அடைய விரும்புகிறவர்கள் ஞானபண்டிதன் முருகப்பெருமானின் ஆசியைப் பெறவேண்டும். முருகனது ஆசியைப் பெற விரும்பினால் தினமும் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவணபவ” என்றோ “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ மனம் உருகி பூஜிக்க வேண்டும். உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும். இப்படி செய்ய செய்யத்தான் முருகனருள் கூடி நம்மீது முருகன் கருணைப்பார்வை பார்ப்பான். இதை அறிவதே சாகாக் கல்வியாகும். முருகனைப் போற்றுவோம்! மரணமிலாப் பெருவாழ்வை அடைவோம்!.
……………..
மாசற்ற முருகனை மனம் உருக பூசித்தால்
ஆசற்ற வாழ்வும் அருளும் உண்டாம்.
கனிவேலன் தந்த கனிவான தமிழை
கனியாக்கி தருவது கடனே.
பக்குவம் மிக்கதோர் பாலமுருகனை
தக்கத் துணையென்றே சாற்றுவர் நல்லோர்.
முருகப்பெருமான் திருவடி மட்டுமே சாகாக் கல்வியை தரவல்லது.
