News
APRIL 2025

குரு உபதேசம் 4365
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
ஞானசித்தர்கள் காலமாகிய வருங்காலங்களிலே பண்புடையோர்களால்தான் ஆட்சி செய்யப்படும் என்பதையும், அத்தகைய பண்புடையோரை முருகப்பெருமானால் அரூபநிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அற்புதமாய் ஆட்சி பொறுப்பிலே அமர்த்தப்படுவார்கள் என்பதையும் அறியலாம்.
ஆட்சி பொறுப்பை பண்புள்ளவர்கள் தகுதிகளை பெற, அவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவத்தை கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டுமென்றும், பொது சொத்து அனைத்தும் மக்களது வரிப்பணத்தினால் ஆக்கப்பட்டது என்பதனால் அது இறை சொத்து, அதாவது சிவன் சொத்தாகும் என்பதை அறிந்தவராயும், பொது சொத்தாகிய சிவன் சொத்தை நாசம் செய்தால் குலமே நாசமாகும் என்பதால், பொதுசொத்தை பாதுகாக்கின்றவராகவும் இருந்திடல் வேண்டும். தனக்குள்ள பதவி, அதிகாரம், ஆள்பலம், பணபலம் போன்றவற்றைப் பயன்படுத்தி தர்மத்திற்கு புறம்பான செயல்களை செய்யாதவராயும், பெரியோரை மதிக்கக் கற்றுக் கொண்டவராயும் இருப்பதோடு சாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடுகளைக் கடந்து சமுதாயத்திலுள்ள அனைவரையும் ஒரு தாய் பிள்ளைகளாக பார்க்கின்ற சமநோக்கு, சமநீதி, சமதர்மம் உடையவராக இருத்தல் வேண்டும். எல்லா இறைவனும் ஒரே தன்மை உடையவரே. இறைவன் ஒருவனே அவன் ஜோதி வடிவானவன் என்பதையும் ஏற்றுக் கொண்டு, வீண் ஆரவார சடங்குகளுக்கு அகப்படாமல் உள்ளவராயும் இருத்தல் வேண்டும். தர்மம் தனை தளராது செய்பவராக இருக்க வேண்டும், எவ்வுயிர்க்கும் தீங்கு நினைக்காதவராய் இருப்பதோடு எவ்வுயிரும் படுகின்ற துன்பத்தை உணரக்கூடியவராயும் அவ்வுயிர்படும் துன்பத்திலிருந்து அவ்வுயிர்தனை மீட்டு காக்கின்ற மனோபாவம் உடைய ஜீவதயவுடையவராய் இருத்தல் அவசியமானது.
ஆதி ஞான பரம்பொருள் ஞானத்தலைவனை வணங்கி ஏற்பவராய் இருத்தல் வேண்டும்.
இப்பண்புடையோரே பண்பாளராய் கொள்ளப்பட்டு, வரும் ஞானசித்தர் ஆட்சியின் பொறுப்பிலே அமர்த்தப்பட்டு நாடு நலமுடைய நாடாக ஆக்கி, உலகம் யுகம் மாற்றம் காணும் என்பதையும் அறியலாம்.
