News
JUNE 2025

குரு உபதேசம் 4434
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி வணங்கி ஆசி பெற்றிட்டால்….
ஜீவதயவே வடிவானவனும், ஜீவதயவினை அளவிலாது பெருக்கி பெருக்கி செஞ்சுடர் ஜோதி வடிவினனாகி சதகோடி சூரிய பிரகாசமுள்ள அருட்பெருஞ்ஜோதி சுடராகி, என்றும் மரணமிலாத பெருவாழ்வையும் பிறப்பு இறப்பற்ற நிலையையும், ஆயிரங்கோடி மன்மதர்களை ஒத்த பேரழகுடையவனாய், மாறா இளமையுடையவனாய் ஆகி, ஞானத்திற்கே மூல சக்தியாய், ஞானபண்டிதனாக விளங்கி இயற்கை கடவுளோடு இயற்கை கடவுளாய் இரண்டற கலந்து எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றவனுமாகிய முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றாலன்றி ஒருவனுக்கு ஜீவதயவு வராது என்பதை அறிந்து கொள்ளலாம்.
அப்படிப்பட்ட மூவர்க்கும் தேவர்க்கும் எட்டா, முருகனது ஆசிகளை பெற வேண்டுமாயின் அந்த பரஞ்சோதிச்சுடர் முருகப்பெருமானே அதற்குரிய வழிமுறையும் கூறியுள்ளதையும் அறியலாம். மனிதன் ஜீவதயவைப் பெறவும் முருகனது ஆசிகளை பெறவும் முதலில் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும்.
தினம்தினம் தவறாமல் காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும், இரவு பத்து நிமிடமும், “ஓம் முருகா” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ முருகனது திருமந்திரங்களை மந்திர ஜெபமாக ஜெபித்து உரு ஏற்றிட வேண்டும். ஜீவதயவினை பெறும் வகையில் மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து வருதலும் வேண்டும் என்பதையும் அறியலாம்.
இவ்விதம் தொடர்ந்து செய்ய செய்ய, முருகனது அருளைப் பெற்று ஜீவதயவைப் பெற்று சகல ஜீவர்களிடத்தும் அன்பு செலுத்தி நாமும் ஜீவதயவுக் கடவுள் முருகனைப் போலவே ஆகிடும் ஆற்றலையும் ஞானத்தலைவன் முருகன் நமக்கு அருள்வான் என்பதையும் அறியலாம்.
