News
JUNE 2025

குரு உபதேசம் 4437
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்….
தானமும், தவமும், யோகமும், ஞானமும் என மனிதன் கடைத்தேறி மரணத்தை வெல்லுகின்ற மார்க்கத்தின் படிநிலைகளையும், மனிதனின் வாழ்வை நெறிப்படுத்தும் சமுதாய சீர்திருத்த வழிமுறைகளையும் ஆதிமூலமாய் விளங்கி மனிதவர்க்கத்தின் ஒப்பற்ற தனிப்பெரும் தலைவனாய் விளங்கி ஞானமே வடிவினனாய் நின்று அருட்பெருஞ்ஜோதி சுடராய் சதகோடி சூரியபிரகாசமுடைய பேராற்றல் ஞானஜோதியாய் விளங்கி நின்று எல்லா உயிர்களுக்கும் இரங்கி இதம் புரிந்து அருளிக் காக்கின்ற ஆதிஞானத்தலைவன் முருகப்பெருமான்தான் தானத்திற்கும், தவத்திற்கும், யோகத்திற்கும், ஞானத்திற்கும் தலைவன் என்பதை அறியாமலும், தலைவன் தன்மையை அறியாமலும், தலைவனை முன்னிறுத்தி தலைவன் முருகன் புகழ் கூறாமலும், தலைவனை வணங்காமலும், தலைவன் முருகன் தயவைப் பெறாமலும் எவரேனும் எங்கேனும் ஏதேனும் ஞானத்துறை செல்லும் யோகப்பயிற்சிகளை தன்னிச்சையாகவோ, பிறர் தூண்டுதலினாலே செய்தால் தலைவனது அருளை பெறாத காரணமதனாலே ரகசியங்கள் புலப்படாமல்போய் நோய்வாய்ப்படுவர்.
இவரேனும் பரவாயில்லை, யோகம் பற்றி அறியாமலும், தலைவனைப் பற்றி அறியாமலும் தனக்கு ஏதோ நிறைய தெரிந்துவிட்டது போலவும், தனக்கு ஏதேதோ சக்திகள் வந்து விட்டது போலவும், சித்தியடைந்து விட்டது போலவும், வீண் மனக்குழப்பத்தில் சிக்குண்டு தயவும் செய்யாமல், தானமும் செய்யாமல், தலைவன் மீது பக்தியும் செய்யாமல், வெறும் பயிற்சிகளை மட்டுமே நம்பி பயிற்சியே சக்திகளைத் தரும் என மூடமாய் நம்பி வீணான பயிற்சிகளை செய்து தானும் கெடுவதோடு தான் கற்றதே உண்மை என பிறரையும் நம்பச் செய்து அவனையும் கெடுத்து அவர்களையும் பாழும் நரகத்தில் தள்ளி வீணாக்கி விடுகின்ற கொடும் பாவிகள் பிற்காலத்திலே கடுமையான நோய்களுக்கு ஆளாகி மருந்துகளின்றி பிறர் அணுக அஞ்சுமளவிற்கு பிறர் அணுக வெறுக்குமளவிற்கு நாறி நாற்றமெடுத்து இறுதியில் துன்பமான மரணத்தை அடையுமாறு கடவுளால் தண்டிக்கப்படுவார்கள் என்பதை முருகனை வணங்கினோர் தெளிவாக அறிவார்கள்.
