News
JUNE 2025

குரு உபதேசம் 4438
முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்….
ஞானத்திற்கு தலைவன் முருகனே என்பதை உணரலாம். ஞானத்தலைவன் முருகப்பெருமான் தான் உண்மைக் கடவுள் என்பதை உணர்ந்து வழிபட்டு கடைத்தேறிட உண்மை ஆன்மீகவாதிகளால் நாட்டினில் முருகனை வணங்குகின்ற மக்கள் அதிகரிப்பதினாலே முருகனை ஏராளமானோர் வணங்க வணங்க முருகனருளை அந்நாடு முழுமையாக பெறும்.
முருகனருளை பெற பெற மக்களிடையே ஜீவதயவு பெருகும், ஜீவதயவு பெருக பெருக உயிர்க்கொலை தவிர்க்கப்பட்டு சுத்த சைவநெறி பரவும், சுத்த சைவ நெறி பரவபரவ உலக உயிர்களெல்லாம் மகிழ்வுறும்.உலக உயிர்கள்மகிழ்வுற மகிழ்வுற இயற்கை மகிழ்வுறும். இயற்கை மகிழ்வுற மகிழ்வுற இயற்கை சீற்றங்கள் குறைந்து மனிதனுக்கு இசைவாய் இயற்கை மாறி முருகனை வணங்கும் மக்களுக்கு இதம் புரிந்து அம்மக்களை வளமாக வாழ்ந்திட வழிவகை செய்யும்.
இயற்கை மகிழ மகிழ அளவான மழையும், சீரான பருவமழையும் தவறாது பெய்து, கடும் வெப்பமில்லாத, கடும் மழையும் இல்லாத, எங்கும் பசுமையான அற்புதமான நாட்டினை ஜீவதயவுடைய மக்களுக்காக இயற்கை பரிசாக தந்தருளும். இவையனைத்தும் இயற்கையோடு இயற்கையாக கலந்து எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்து மனித சமுதாயத்தை வழிநடத்தி காக்கின்ற முருகனது அருளினாலே முருகனது தயவினால் மட்டுமே முடியும் என்பதை அறியலாம்.
