News
APRIL 2025

குரு உபதேசம் 4376
முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
காமதேகத்தினில் உள்ள அந்த அற்புத சக்தியை முருகனருளால் தட்டி எழுப்பி செயல்படுத்த துவங்கினால் மும்மலக் கசடுடைய காமதேகத்தை அச்சக்தி வென்று இந்த மானுட தேகத்தையும் அற்புத தேகமாக மாற்றி ஒளி உடம்பாக்கிவிடும் என்பதையும் அறியலாம்.
முருகனது அருள் கூடினால் ஞானம் பெறலாம். முருகனது அருளைப் பெற வேண்டுமாயின் இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு செலுத்திட வேண்டும். அன்பு செலுத்த செலுத்த, செலுத்துவோர்க்கு ஜீவதயவை பெருக்கும், ஜீவதயவு பெருக பெருக சிந்தை தெளிவு ஏற்படும், சிந்தை தெளிய தெளிய அறிவு தெளிவு வரும், அறிவு தெளிய தெளிய எது பாவம்? எது புண்ணியம்? என்று உணர்த்தப்படும், பாவ புண்ணியம் உணர உணர பாவம் நீக்கி புண்ணியத்தை பெருக்கலாம், புண்ணியம் பெருக பெருக சிறப்பறிவு செயல்படும், சிறப்பறிவு செயல்பட செயல்பட நம்முடம்பினுள்ள மும்மலச்சிறையில் ஆன்மா அகப்பட்டுள்ளதை அறியலாம். சிறப்பறிவு பெருக பெருக சிறைபட்ட ஆன்மாவை விடுவிக்க முருகனின் அருளே துணையென்பதை அறிந்து முருகனது தயவை, அருளைப் பெற்று சிறைபட்ட ஆன்மாவை விடுவிக்கும் ஆற்றலைப் பெறலாம்.
சிறைபட்ட ஆன்மா விடுபட்டு காமதேகத்தினை ஞானதேகமாக மாற்றி, என்றும் மாறா இளமையும், ஒளிபொருந்தியதுமான மரணமிலாப் பெருவாழ்வை அளிக்க வல்லதான ஒளிதேகத்தினை அளிக்கும்.
ஆதலின் புண்ணியமும் முருகன் திருவடி பக்தியுமே மனிதனை மனிதனாக, மனிதனை மாமனிதனாக, மனிதனை தயவுடைய சிறந்த மனிதனாக, மனிதனை தேவனாக, மனிதனை தெய்வமாகவும் ஆக்குகின்றதையும் அறியலாம்.
கொற்றவன் முருகனை கூவி அழைத்திட
நற்றவம் சித்திக்கும் நமனும் அஞ்சுவான்.
புண்ணிய முருகனின் பொற்பதம் போற்றிட
நண்ணிய அனைத்தும் நல்கும் முக்தியே.
வைவைத்த வேலோன் வழங்கிய அருளை
மெய்கண்ட தேவனும் பெற்றான் இனிதே.
