News
MAY 2025

குரு உபதேசம் 4401
முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
முருகப்பெருமான் திருவடிகளை வணங்க வணங்க முற்றுப்பெற்ற ஞானியர் கூறிய உபதேசங்களை கேட்கவும், அறியவும், படிக்கவும், உணரவும் வாய்ப்புகள் ஏற்படும்.
கோளறுபதிகம், மகான் மாணிக்கவாசகரின் சிவபுராணம், ஒளவையாரின் விநாயகர் அகவல் போன்ற நிலையாமையை உணர்த்தும் ஞானிகளின் ஞான நூல்களை கற்கும் வாய்ப்பு உண்டாவதோடு நிலைப்பெற்ற வாழ்வாகிய மரணமிலாப் பெருவாழ்வை அடையும் மார்க்கமும் புலப்படும்.
மரணமிலாப் பெருவாழ்வை அளித்து காக்க வல்லவன் முருகன்தான் என்பதையும் அறியவும் முடியும். முருகனை வணங்க வணங்க இப்பிரபஞ்சத்திலேயே அயராத தவமுயற்சியினால் கோடிக்கணக்கான ஆண்டுகள் அரும்பாடுபட்டு நமது உடலைப் பற்றியும், உயிரைப் பற்றியும், உயிர் உடம்பு இணைப்பும், பிரிவும் பற்றியும், பிறவியின் இரகசியம் பற்றியும், பிறவிக்கு காரணம் பற்றியும், பிறவியிலிருந்து மீள்வது பற்றியும், மரணம் பற்றியும், இனி பிறவாநிலை உள்ளது பற்றியும், மரணமற்ற வாழ்வு பற்றியும், மரணமிலாப் பெருவாழ்வை அடையும் முறை பற்றியும் ஆய்ந்து ஆய்ந்து அறிந்து தெளிந்து உணர்ந்து பெறுதற்கரிய பெரும் பேறான இந்த மானுடதேகத்தின் கண் உள்ள அற்புதமான ஒளிதேகத்தை கண்டுகொண்டு அதை உண்டாக்கவல்ல பொறிபுலன் இயக்கமும் அறிந்து “தயவே மரணத்தை வெல்லும் ஆயுதம்” என்பதையும் அறிந்து, தயவின் துணையால் இயற்கையன்னையின் அருட்கொடையால் ஆன்மாவை பற்றிய மும்மலக்கசடை, தேகத்திலுள்ள காமக்கசடை நீக்கி நீக்கி தூய்மையாக்கி கரிய இருண்ட காமகசடான தூலதேகத்தை சதகோடி சூர்ய பிரகாச ஒளி பொருந்திய ஒளி உடம்பாக மாற்றி இறுதியில் மரணத்தை வென்று பெருஞ்சாதனையை, பேராற்றலை பெற்று என்றும் அழிவிலாத மரணமிலாப் பெருவாழ்வை அடைந்த முதல் ஞானியெனும் பெருமையையும் பெற்றான் முருகன் என்பதையும் அறியலாம்.
ஆதி ஞானத்தலைவன் முருகனே அனைத்திற்கும் மூலமானவன்.
முருகனே இயற்கையை வென்ற முதல் மாமனிதன்.
முருகனே மரணத்தை வென்ற மகா ஞானி.
முருகனே மரணமிலாப் பெருவாழ்வை முதலில் பெற்றவன்.
முருகனே யோக ஞானமெலாம் உண்டாக்கியவன்.
முருகனே யோகத்தின் தலைவன்.
முருகனே ஞானத்தின் தலைவன்.
முருகனே தயவு, தயவே முருகன்.
முருகனே தயைசிந்தையை தந்து நம்மை காப்பான்.
முருகனே யோகம் அளிப்பவன்.
முருகனே ஞானம் அளிப்பவன்.
முருகனே மரணமிலாப் பெருவாழ்வை அளிப்பவன் என்பதை முற்றும் உணர்ந்து முருகன் திருவடிகளைப் பற்றினாலன்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியாது என்பதையும் தெளிவாக அறியலாம்.
……………..
கலியுகக் கடவுள் கந்தனைப் போற்றிட
நலிவில்லா வாழ்வு நண்ணும் முக்தியே.
பற்றற்ற முருகனின் பதத்தை போற்றிட
கற்ற கல்வியால் காணலாம் உண்மையே.
