News
JULY 2025

குரு உபதேசம் 4462
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
இயற்கை கடவுளால் மனிதனுள் வைக்கப்பட்ட அற்புத சக்தியை தட்டி எழுப்ப புண்ணியமும் அருளாசியும் வேண்டும். முருகப்பெருமானை வணங்க வணங்க முருகனது அருள் கூடி நிற்பதோடு புண்ணிய பலத்தின் உதவியால் அந்த சக்தி தட்டி எழுப்பப்படும். அதுவே எல்லாவற்றையும் தரும் என்பதையும் அறியலாம். கோடானு கோடி யுகங்கள் தவம் செய்து தாம் பெற்றிட்ட அற்புத சக்தியின் வெளிப்பாட்டின் மகிமையை தாம் அடைந்த அந்த பேரின்பத்தை மற்றவர்க்கும் அற்புதமாய் பெருந்தாய் பெருங்கருணையோடு வழங்கி அனைவரையும் அடையச் செய்தனன் முருகப்பெருமான். அப்படிப்பட்ட அற்புத சக்தியை நாமும் பெற்று இயற்கையால் அளிக்கப்பட்ட அந்த சக்தியை முருகனருள் தூண்டி நாமும் பயன் பெற்று மரணமிலாப் பெருவாழ்வை பெற வேண்டுமாயின் எல்லாம்வல்ல முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி தினம் தினம் தவறாமல் காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும், இரவு பத்து நிமிடமும் “ஓம் முருகா” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ பூஜைகள் செய்தும் மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வரவர, நாமும் முருகப்பெருமான் அருளால் அந்த அற்புத சக்தியை தட்டி எழுப்பி முருகப்பெருமான் அடைந்த அந்த பேரின்ப நிலையை அடையலாம் என்பதை அறியலாம்.
