News
AUGUST 2025

குரு உபதேசம் 4500
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
இவ்வுலகினில் கல்வி கற்றோர் ஏராளமாய் இருந்தபோதும் அவர்களது கல்வி வெறும் ஏட்டுக்கல்வியாகவே அதாவது வாழ்வியல் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட கல்வியாகவே உள்ளது. அது ஒருவகை திறமை. ஆயினும் அது நமக்கு வர இருக்கும் துன்பத்தையோ, வினையையோ, மரணத்தையோ தடுக்க இயலாத கல்வியாகும். அகத்தீசனை மனமுருகி பூஜிக்க பூஜிக்க இந்த ஏட்டு கல்வியை பல்காலம் பயின்று கல்வி கற்றவன் என பெருமிதம் கொள்ளும் மாயையிலிருந்து முதலில் விடுபட வேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். சரி உண்மையான கல்வி எது, அது தன்னையும் தலைவனையும் அறிகின்ற கல்வியாகும். அதுவே ஞானக்கல்வியாகும். ஞானக்கல்வி கற்க, தமிழைக் கற்க வேண்டும். தமிழ் கற்றவர்கள் ஞானத்துறைக்கு வர விரும்பி ஞானநூல்களையும் படிப்பார்கள். ஏராளமாய் திருக்குறள், திருவாசகம், தேவாரம், திருஅருட்பா, திருமந்திரம், சித்தர் பாடல்கள் என பலப்பல நூல்களை படிப்பார்கள், மனப்பாடம் செய்வார்கள். ஆனால் எத்தனை எத்தனை ஞானநூல்களை கற்றாலும் அதன் உட்பொருளை அறியாது பேசுவார்கள். சரி ஞானிகள் ஆசியாலும், முன்ஜென்ம வாசனையாலும் ஞானநூல்களை கற்றாலும் சிலபேர் அதன் பொருளை அறிய முற்பட்டு சிறிது வெற்றியும் பெறுவார்கள். நூலின், கவிகளின் பொருள் புரிந்தாலும் ஞானிகள் கூறியபடி நடந்திட மாட்டார்கள். அதாவது நூல் கூறும் கருத்தின்படி நடக்க இயலாமல் தடுமாறுவார்கள். சிலர் கடைப்பிடிக்க முயற்சி செய்தாலும் அவர்களால் முடியாது.
இப்படி ஞான நூல்களை படிப்பதில்லை, படித்தாலும் புரியாது, படித்தது புரிந்தாலும், கடைப்பிடிக்க முடியாது, கடைப்பிடிக்க துவங்கினாலும் முழுதுமாக செல்ல முடியாது. இதற்கெல்லாம் என்ன காரணம் எனில் பக்தியும் புண்ணிய பலமும் இல்லாமையே என்பதை உணர்வார்கள்.
தயவே வடிவான தயாநிதி தனிப்பெருங்கருணை வடிவான முருகப்பெருமானின் ஆசியை பெறாததால் தான், ஞானிகள் கூறியதை படிக்கவோ, அறியவோ கடைப்பிடிக்கவோ முடியவில்லை என்பதையும் அறிவார்கள்.
சரி தயவே வடிவான முருகனது தயவை பெற என்ன செய்ய வேண்டுமென்று அகத்தீசனை மனமுருகி பூஜிக்க பூஜிக்க அன்பர்தம் மனதினுள் அகத்தியர் தோன்றி தயவே வடிவான முருகனது தயவை பெற இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளிடத்தும் குறிப்பாக ஆறறிவு உடைய மனித குலத்திற்கு தொண்டு செய்தால்தான் முருகன் ஆசியை பெற முடியும் என்பதை உணர்த்துவார்.
பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தைக் கண்டு எவர் மனமிரங்கி உதவிட முன்வருகிறார்களோ அவர்கட்கே தலைவனும் அவர்தம் மனதினுள் இறங்கி தயவினை ஊட்டி அவர்மீது தயவு காட்டுவார் என்பதையும் அறியலாம்.
எவரை உலக உயிர்களெல்லாம் வாழ்த்துகிறதோ அவர்க்கே அவர் கற்ற கல்வியும், ஞானமும், அறிவும் சிறப்பாய் செயல்பட்டு மயக்கமற்ற உண்மை ஞானம் புலப்பட்டு அனைத்தும் அறியும் வல்லமையையும் பெற்று கடைப்பிடிக்கும் ஆற்றலையும் வாய்ப்பையும் உதவிகளையும் பெற்று ஞானநூல்களில் கூறியவற்றை அறிந்து, தெளிந்து, கடைப்பிடித்து, கற்று, தேர்ந்து வெற்றியும் காண்பார்கள் என்பதையும் தயவிலாதோர் வெறும் நூலறிவினால் செய்யும் முயற்சி வீணில் கழிந்து தோல்வியையே தழுவுவதோடு, மரணத்தையும், நரகத்தையும் பரிசாகக் கூட தந்துவிடும் என்பதையும் அறியலாம்.