News
SEPTEMBER 2025

குரு உபதேசம் 4523
முருகப்பெருமான் திருவடிகள் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
ஞானத்தலைவன் முருகனே என்பதை உணர்ந்து ஞானபண்டிதன் முருகனது திருவடிகளிலே உள்ளம், உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்து தம்மை முருகனது திருவடிகளுக்கு கொத்தடிமையாக ஒப்புவித்து என்னைக் கொத்தடிமையாக ஏற்றுக் கொள் முருகா! முருகா! முருகா! என்றே தளராது இடைவிடாது மனம் உருகி உருகி பூஜை செய்ய செய்ய முருகனது கடைக்கண் பார்வைக்கு, அச்சாதகன் ஆளாகி, அச்சாதகனது பாவபுண்ணியச் சுமைகளை குறைத்திட அருள் செய்வான் முருகப்பெருமான்.
பாவசுமை குறைய குறைய அறிவு தெளிவாகும். அறிவு தெளிவடைய புண்ணியமே உகந்த சாதனம் என்பதை முருகப்பெருமான் உணர்த்த, உணர்ந்து ஒருபக்கம் மனம் உருகி பூஜையும், இன்னொரு பக்கம் பிறர் அறியாவண்ணமே மனதினுள் தளராது அயராது நாத்தழும்பு ஏற முருகா முருகா முருகா என மனம் உருகி அரற்றி பூஜை செய்தும், உலக உயிர்கள் படும் துன்பத்தை தமது துன்பமாக எண்ணி எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தும் உபகாரம் செய்தும், எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு புண்ணிய செயல்களை செய்து செய்து வரவர, அறிவு மேலும் மேலும் தெளிவடைந்து முருகனது அருளுக்கு மேலும் பாத்திரமாகிடுவான் சாதகன்.
முருகனது அருள் கூட கூட, அறிவு தெளிவு உண்டாகும். பக்தியின் உருக்கம் பெருகும், புண்ணிய செயல்கள் பெருகி தரும பலம் கூடும், இவையனைத்தும் ஒன்று கூடி நிற்க பாவ புண்ணியம் சமனாகும் காலத்திலே முருகன் அறிவின் கண் வெளிப்பட்டு தேக ரகசியங்களை வெளிப்படுத்தி சாதகனுக்கு ஜென்மத்தைக் கடைத்தேற்ற வல்லதும் தேகமாற்றத்தை உண்டாக்கவல்லதுமான வாசி யோக ரகசியங்களை படிப்படியாக உணர்த்த துவங்குவான். வாசி யோக ரகசியங்கள் உணர உணர அதை முருகனே சாதகனை சார்ந்து நடத்தி ஜென்மத்தைக் கடைத்தேற்றி பெறுதற்கரிய ஒளிதேகம்தனையும் உண்டாக்கி தருவான் முருகப்பெருமான்.
……………
ஆண்டி மகனாம் இவ்வுலகை ஆறுமுகன் ஆண்டிட
வேண்டிய அனைத்தும் விரைந்தே பெறுவர்.
பாடுபெறும் இவ்வுலகை பண்பாளர் ஆண்டிட
வீடுபேறு அடைவர் விரைந்தே!
