News
DECEMBER 2025
குரு உபதேசம் 4616
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
உயிர் வாழ உணவு உண்பது மிகமிக அவசியம். ஒவ்வொரு உயிரும் தாம் வாழ எல்லா வகையிலும் போராடி வாழ்கிறது. ஒவ்வொரு உயிரும் வாழத்தான் விரும்பும், சாகுவதற்காக அல்ல. உயிர்கள் வாழ உணவு அவசியம். உயிர் வாழ உணவு உண்பது, என்பது தேவைதான். அதற்காக இயற்கை மனிதனுக்கு இவ்வுலகினில் ஏராளமான காய் வகை, கனி வகை, கீரைகள், பருப்புகள், இலைகள், கிழங்குகள் என பலபலவிதமான தாவரங்களை படைத்து அவற்றை பயிர் செய்யும் முறையும் அதற்குரிய அறிவும் தந்து சைவ உணவை உண்ணும்படியான உடலமைப்பையும் தந்து மனிதன் நன்கு வாழ்ந்து, தான் வாழ்வதோடு இயற்கையால் படைக்கப்பட்ட பிற உயிர்களுக்கும் பசியாற்றுவித்து பிற உயிர்களையும் காக்கும்படியாக பகுத்தறிவும் தந்து மனிதனை உயர்ந்த பிறப்பாக படைத்துள்ளான்.
இவ்வளவு கருணையை இயற்கை தாய் மனிதன் மீது வைத்து எல்லா வாய்ப்புகளையும் உயிர் வாழ தந்த போதும் அவன் பிற உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை சாப்பிடும்படியான அருவெறுக்கத்தக்க செயலை செய்கின்றான். அது கொடும் பாவம் என்பதும், பிறஉயிரை கொன்று தின்னும் கொலை பாதகச் செயல் பாவத்தை உண்டாக்குவதோடு இயற்கையின் கோபத்திற்கும் ஆளாக்கிடும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். உயிர்க்கொலை அதிகமாகும் இடங்களிலே இயற்கை வெகுண்டு எழும் என்பதையும் அறியலாம்.


