News
JULY 2025

குரு உபதேசம் 4453
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
ஆறறிவு உள்ள மனிதன் வாயில்லா ஜீவன்களுக்கு இடையூறு செய்வதும், அதை கொலை செய்வதும் பாவம் என்றும், அந்த உயிர் படும் துன்பத்தை கண்டு ரசித்தால் அது நம்மை நரகத்தில் தள்ளி கொடும் துன்பத்தை தரும் என்பதை அறியலாம்.
ஆறறிவு உள்ள மனிதன் மற்றொருவனை துன்புறுத்தினால் துன்பப்பட்டவன் பலசாலியாக இருந்தால் துன்புறுத்தியவனை கடுமையாக தாக்குவான். பிறரை துன்புறுத்தினால் துன்பப்படுபவன் நலிவுற்றவனாய் இருந்தால் அவன், தான் படும் துன்பத்தை “ஐயோ அம்மா வலிக்கிறதே காப்பாற்ற யாரும் இல்லையா” என பிறரை உதவிக்கு அழைத்து தனது துன்பத்தை வெளிப்படுத்தி பிறரின் துணையோடு தம்மை பாதுகாத்து கொள்வான். அவ்வாறு இல்லாவிடினும் மனிதர்களை காக்க சட்டமியற்றி அதன் மூலம் துன்புறுத்துபவன் வலிமை உடையவனாயினும் சரி அவனை தண்டிக்கலாம்.
ஆனால் பாவம், தான் துன்புறுத்தப்படுகிறோம் என்பதே தெரியாமல் தன்னை வளர்த்தவன் ஏதோ நம்மை வலிக்கும்படி செய்கிறான் என்ன செய்வது? இவன் போட்ட உணவை உண்ட நன்றி விசுவாசத்தால் எதிர்க்கக்கூட திராணியற்று அந்தோ பரிதாபம் வளர்த்தவனை பரிதாபமாக பார்த்து “அம்மா அம்மா” என கத்துமே தவிர அவனுக்கு எதிராக செயல்படாது.
மிருகபலம் வாயில்லா ஜீவன்களுக்கு இருந்தபோதும், தன்னை வளர்க்கின்ற, தனக்கு உணவளிக்கின்ற, மனித சமுதாயத்தை, வாயில்லா ஜீவன்கள் எதிர்க்காமல் இருப்பதினால் மனிதன் தான் பாதுகாக்க வேண்டிய வாயில்லா ஜீவன்களை அவை அமைதியாய் இருக்கின்றன என்பதற்காக துன்புறுத்தினால் அவை என்ன செய்யும்? தம் துன்பத்தை வெளிப்படுத்தக் கூட முடியாமல் தன் வலியை பொறுத்துக் கொண்டு கதறுமே தவிர வேறொன்றும் அதற்கு தெரியாது. இப்படி நம்மை நம்பிய வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தினால் ஐந்தறிவு உடைய ஜீவன்கள் வேண்டுமானால் பொறுத்து போகலாம். ஆனால் அவற்றையும் ஆறறிவு மனிதனையும் படைத்திட்ட இயற்கை கடவுள் ஒருபோதும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டான், என்றேனும் ஒருநாள் இதற்குரிய தண்டனையை கண்டிப்பாக மிகக் கொடூரமான முறையில் தந்தே தீரும் என்பதை அறிந்து கொள்வதோடு ஜீவதயவே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்பதையும் அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜிக்க பூஜிக்க இவ்வுலகினில் தோன்றிய எல்லா உயிர்களும் இறைவனால் படைக்கப்பட்டது. அவை அவை இவ்வுலகினில் வாழவே பிறந்துள்ளன. எப்படி நாம் வாழ சுதந்திரம் உள்ளதோ அதேபோல அவைகளும் இவ்வுலகினில் வாழ சுதந்திரம் உள்ளதையும் உணர்வார்கள்.
ஆதலால் எவ்வுயிரையும் துன்புறுத்தக் கூடாது என்றும், பிறஉயிர் படும் துன்பம் கண்டு இரங்கி உதவி செய்கின்ற ஜீவதயவும் உண்டாகும்.
தயவே வடிவான தயாநிதி முருகப்பெருமானின் திருவடிகளை பற்றி பூஜிக்கும் மக்கள் நிச்சயம் பிறஉயிர்களுக்கு துன்பம் செய்ய மாட்டார்கள்.