News
AUGUST 2025

குரு உபதேசம் 4477
முருகப்பெருமான் திருவடிகளைப்பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
இவ்வுலகினில் முருகப்பெருமான் தலைமையிலே ஞானிகளின் அருட்பார்வையால் கலியுகம் முடிந்து ஞானயுகம் துவங்கி ஞானிகள் ஆட்சி ஏற்படுவது உறுதி என்பதையும் அது வெகுவிரைவில் இவ்வுலகினில் அமைக்கப்படும் என்பதையும் தெளிவாக உணரலாம்.
முருகப்பெருமான் தலைமையில் நடக்கவிருக்கும் ஆட்சியில் பணிபுரிய, பதவிவகிக்க, தொண்டு செய்ய, சேவையாற்ற, வழிநடத்த என பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் தேவைப்படுவார்கள் என்றபோதும் அத்தொண்டரெல்லாம் முருகப்பெருமான் வகுத்த அடிப்படை தகுதிகளை பெற்றால்தான் முருகனது ஆட்சியில் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்பவராய் இருப்பதும், தினமும் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் கட்டாயம் முருகனின் திருநாமங்களான“முருகா” என்றோ “ஓம் சரவணபவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ தவறாது வழிபாடுகள் செய்பவராயும், மாதம் ஒருவருக்கேனும் தம் கையால் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து ஜீவதயவை பெற்றவராயும் இருப்பார்கள் என்றும் மது அருந்தாதவராயும், தீய பழக்கவழக்கம் இல்லாதவராயும், பொதுசொத்தை பாதுகாப்பவராயும், பொருள்பற்று இல்லாதவராயும் இருப்பார்கள் என்பதையும் அறியலாம்.
அப்படிப்பட்ட ஆட்சியில் பங்குகொள்ள விரும்புவோர்க்கு இத்தகுதிகள் இல்லையாயினும் இன்றிலிருந்தேனும் அந்த ஆட்சிக்குரிய பண்புகளைப் பெற தினம் தினம் மறவாமல் முருகனது திருவடிகளைப் பற்றி பூஜை செய்தும், மதுப்பழக்கத்திலிருந்து விடுபட்டும், பொருள்பற்றை விட்டும், தானதருமங்களை செய்தும், உயிர்க்கொலை தவிர்த்தும், சைவ உணவை மேற்கொண்டும் முருகனே கதி அவனே நம்மை காக்கவல்ல தெய்வம் என்றே முருகனது திருவடிகளை சரணடைந்து பக்தி செலுத்தினால் நாமும் அத்தகைய தகுதிகளை முருகனருளால் பெற்று ஞானிகள் ஆட்சியிலே பங்குபெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதை அறியலாம்.
…………………..
காலத்தை வென்ற கந்த கடவுளே
ஞாலத்தை ஆள்வான் நான்மறை போற்றவே.
