News
SEPTEMBER 2025

குரு உபதேசம் 4513
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
ஞான நூல்களை கற்க கற்க பக்தி வசப்படும். பக்தி செலுத்த செலுத்த முருகனது திருவடிகளே ஞானமளிக்கும் திருவடிகள் என்பதும் புலப்படும். முருகனது திருவடிகள் தவிர வேறொன்றாலும் நமது கர்ம வினைகளை நீக்கி ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாது என்பதும், முருகனது அருள் ஒன்றினால்தான் அகிலாண்டகோடி பிரம்மாண்ட சக்திகள் கட்டுப்படுகின்றன என்பதும், அகத்தியர் முதல் அரங்கன் வரையிலும் முருகனது தயவால்தான் முருகனது அருளால்தான் ஞானிகளாய் ஆகி ஞானவர்க்கமே உண்டானது என்பதும் புலப்படும்.
முருகனை வணங்க வணங்க அருணகிரிநாதர் அருளியது போல் முருகா என ஓர் தரம் ஓதும் அடியவர் இணைதாள் முடிமேல் அருள்வோனே… என்பதும் சரணகமலாலயத்தில் அரை நிமிஷ நேரம் மட்டும், தவம் முறை தியானம் வைக்க நலமாகும் என அருளியதும் எவ்வளவு மிகப்பெரிய தத்துவம் என்பதும், பக்தியே ஞானிகளை உருவாக்கியுள்ளது என்பதும் புலனாகும்.
“முருகா” என ஒருமுறை மனம் உருகி சொல்லிவிட்டாலே மூவாயிரம் கோடி நன்மைகள் உண்டாகும் என்பதும், “முருகா” என ஒருமுறை மனம் உருகி முருகனை அழைத்திட்டாலே மூன்று உலகமும் வசமாகும் என்பதும் “முருகா” என ஒருமுறை சொல்லிவிட்டால் மண், பொன், பெண் எனும் மூன்று ஆசைகளும் அற்றுவிடும்.
எல்லையில்லா வல்லமையும் எல்லையில்லா கருணையும் தயவும் மிக்க தன்னிகரற்ற தனிப்பெருந் தலைவன் முருகனின் கருணையும் தயவும் இல்லையேல் யாதொன்றும் இயலாது என்றும் அவனது அருளின்றி அணுவும் அசையாது என்பதும் பக்தியினால் மட்டுமே முருகனை காணவும், உணரவும், அருள் பெறவும் முடியும் என்பதும் உணரத்தப்படும்.
……………
அறம் பொருள் இன்பம் வீடுபேறு அறிய
திறம்பட திருக்குறள் கற்றிட வேண்டும்.
முப்பாலில் நாற்பால் மொழிந்த வள்ளுவனை
தப்பாமல் போற்றிட தானவனாமே.
நற்றவ முருகனே நாட்டை ஆண்டிட
உற்றநல் துணையென்றே ஓதுவார் நல்லோர்.
