Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

News

Our Gurunathar is so compassionate that he wishes every human being should attain liberation in this or ensuing rebirths. Our Gurunathar has blessed us with so many ways to achieve this like doing annathaanam (food donation to poor) at Ongarakudil, Thuraiyur as well as our branches all over the world like Malaysia, London and other disctricts of Tamil Nadu, conducting Thiru Vilakku Poojai, providing herbal nutritious porridge (arutkanji), feeding animals, eye camp, ambulance services etc.

MAY 2023

Back
15th May 2023
மகான் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்






மகான் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்

மகான் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்
(திருஞானசம்பந்தர்)

இரண்டாம்-திருமுறை

பியந்தைக்காந்தாரம்

பொது (நாடு)

பொது (தலம்)

கோளறு திருப்பதிகம்

துவக்கப்பாடல்

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

01

மூங்கில் போன்ற தோள்களையுடைய உமாதேவியை இடது பாகத்திலே வைத்தவனும், விஷத்தை உண்டு (அதனால்) இருண்ட
நீலகண்டனும் ஆகிய சிவபிரான் மிகச் சிறந்த வீணையைத் தடவி, குற்றமில்லாத இளஞ்சந்திரனையும் கங்கையையும்
முடியின்மீது தரித்து, அடியேனது உள்ளத்தில் எழுந்தருளிய காரணத்தால், சூரியனும், சந்திரனும்,
அங்காரகனும், புதனும், குருவும், சுக்கிரனும், சனியும், இராகுவும் கேதுவுமாகிய இரு பாம்புகளும்
தொண்டர்கட்கு மிகுதியாகவே குற்றமற்றவனாய் நல்லனவாகும்; அவை நல்லனவே செய்யும்

என்பொடு கொம்பொ டாமை இவைமார் பிலங்க
எருதேறி ஏழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்துஎன்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொ டேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

02

எலும்பும் பன்றிக்கோடும் ஆமை ஓடும் ஆகிய இவை திருமார்பில் விளங்கவும், ஊமத்த மலர் மாலையையும்
கங்கையையும் முடியிற் சூடியும், உமாதேவியோடும் விடையூர்ந்து எழுந்தருளி வந்து அடியேனது உள்ளத்தில்
புகுந்த காரணத்தால் ஒன்பதாவது நாளாகிய ஆயில்யமும், பத்தாம் நாளான மகமும், பதினோராம் நாளாகிய விசாகமும்,
பதினெட்டாம் நாளாகிய கேட்டையும், ஆறாம் நாளாகிய திருவாதிரையும் ஆகிய இவையோடு வைத்து எண்ணப்படும் பரணி,
கார்த்திகை, பூரம், சித்திரை, சுவாதி, பூராடம், பூரட்டாதி எனப்படும் இந்நாட்களனைத்தும் அடியார்களுக்கு
மிகவும் அன்புடன் நல்லன; அவை நல்லனவே செய்யும்.

உருவளர் பவள மேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி சயமாது பூமி
திசைதெய்வ மான பலவும்
அருநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

03

அழகு மிகுகின்ற பவளம் போன்ற சிவந்த திருமேனியில் திருவெண்ணீற்றை அணிந்து, மணங்கமழ்ந்து அலர்கின்ற கொன்றை
மாலையையும் பிறையினையும் முடியிற் சூடி, வெள்விடை மேல் உமையம்மையாருடன் அடியேனது உள்ளத்தில் எழுந்தருளிய
காரணத்தால் பொன்மகளும், நாமகளும், கொற்றவையும், பூமகளும், திசைகாப்பாளருமாகிய பல தெய்வங்களும்
திருத்தொண்டர்களுக்கு மிகவும் அரிய முறை உடையன என்றாலும் நல்லன; அவை நல்லனவே செய்யும்.

மதிநுதல் மங்கை யோடு வடபால் இருந்து
மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

04

பிறை போலும் நெற்றியையுடைய உமையம்மையோடு வடதிசையில் இருந்து வேதங்களைத் திருவாய் மலர்ந்தருளுகின்ற
எங்கள் சிவபெருமான், கங்கா நதியோடு கொன்றை மாலையைத் திருமுடியிற் சூடி, அடியேன் உள்ளத்தில் புகுந்த
காரணத்தால், கோபிக்கும் காலனும், தீயும், நமனும், இயமதூதர்களும், கொடிய நோய்களும் ஆகிய இவை எல்லாம்
தொண்டர்களுக்கு மிகவும் நன்மை செய்யக்கூடியனவாம்.

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள்த னோடும்
விடைஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உரும்இடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

05

விஷத்தை அணிந்த திருநீல கண்டத்தை உடையவரும், எமது தந்தையும், உமாதேவியோடு ஆனேற்றை ஊர்ந்தருளுகின்ற
அடியார்களது பரமனுமாகிய சிவபிரான், மிக்க கருநிறம் உடைய வன்னியையும் கொன்றை மலரையும் முடியில் தரித்து
அடியேனது உள்ளத்தில் எழுந்தருளிய காரணத்தால், கொடிய சினமுடைய அசுரரோடும், அச்சத்தை உண்டாக்கும் இடியும்,
மின்னலும், மிகுதியான பூதங்களும் தொண்டர்களுக்கு மிகவும் பயப்படுந்தன்மை உடையவனவாய் நல்லனவாகும்; அவை
நல்லனவே செய்யும்.

வாள்வரி அதள தாடை வரிகோவ ணத்தர்
மடவாள்த னோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்துஎன்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவை யோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

06

ஒளியையும் கோடுகளையும் உடைய புலித்தோலாடையாகிய கட்டின கோவணத்தையுடைய இறைவர், அன்றலர்ந்த மலர்களையும்
வன்னியையும், கொன்றை மாலையையும், கங்கையையும் திருமுடியில் சூடி, உமாதேவியாருடன் எழுந்தருளி வந்து,
அடியேனுள்ளத்தில் புகுந்த காரணத்தினால், கொலைத் தொழிலையுடைய சிங்கம், புலி, யானை, பன்றி, பாம்பு, கரடி,
மனிதக் குரங்கு ஆகிய இவை யாவும் தொண்டர்களுக்கு மிகுதியும் நல்லன; அவை நல்லனவே செய்யும்.

செப்பிள முலைநன் மங்கை ஒருபாக மாக
விடைஏறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

07

புகழ்ந்து பேசக்கூடிய இளமையான தனங்களையுடைய உமாதேவியார் ஒரு பக்கத்தில் அமர, இடபத்தை
ஊர்ந்தருளுகின்ற செல்வராகிய இறைவர், தம்மை வந்து அடைந்தவர்களான திங்களையும், கங்கையையும் முடியில்
தரித்து, அடியேனுடைய உள்ளத்தில் எழுந்தருளிய காரணத்தால், வெப்பம், குளிர்ச்சி, வாதம், பித்தம்,
மற்றுமுள்ள தீவினைகளும் தொண்டர்களுக்கு அதிகமாக வந்து வருத்தாத அவ்விதத்தில் நல்லனவாம்; அவை நல்லனவே
செய்யும்.

வேள்பட விழிசெய் தன்று விடைமேல் இருந்து
மடவாள்த னோடும் உடனாய்
வான்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்துஎன்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

08

மன்மதன் பட்டொழியும்படி அந்நாளில் விழித்து நோக்கி, உமாதேவியாரோடும் கூடினவராய்,
சந்திரனையும் வன்னியையும் கொன்றை மலரையும் சிரசில் தரித்து, எருதின்மேல் எழுந்தருளி வந்து அடியேனது
உள்ளத்தில் புகுந்த காரணத்தால், ஏழு கடல்களும் சூழ்ந்த இலங்கைக்கு அரசனாகிய இராவணனோடு ஆழ்ந்த கடல்களும்,
பிற துன்பங்களும் நெருங்கி வருத்தாது தொண்டர்களுக்கு மிகவும் நல்லன; அவை நல்லனவே செய்யும்.

பலபல வேட மாகும் பரன்நாரி பாகன்
பசுஏறும் எங்கள் பரமன்
சலமக ளோடெ ருக்கு முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

09

பலபலவான திருவுருவங்களோடு கூடிய பரமரும், பெண்ணொரு பாகரும், விடையை ஊர்கின்ற அடியோர்களது மேலோனுமாகிய
இறைவர், கங்கையோடு எருக்க மலரையும் திருமுடியில் தரித்து அடியேனது உள்ளத்தில் எழுந்தருளிய காரணத்தால்
நான்முகனும், திருமாலும், வேதங்களும், தேவர்களும், சுழன்று வரும் காலமும், கடலும், மலையும் ஆகிய இவை
எல்லாமும் தொண்டர்களுக்கு அதிகமாக நல்லனவாம்; அவை நல்லனவே செய்யும்.

கொத்தலர் குழலி யோடும் விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

10

பூங்கொத்துக்கள் பரந்த கூந்தலையுடைய உமாதேவியாரோடு அருச்சுனனுக்கு அருள்செய்த வேடராகிய இறைவர், ஊமத்த
மலரையும் சந்திரனையும் பாம்பையும் திருமுடியில் தரித்து அடியேன் உள்ளத்தில் எழுந்தருளிய காரணத்தால்
இறைவனது திருவெண்ணீறு, புத்தர்களையும் சமணர்களையும் வாதத்தில் தோற்கடித்துக் கெடும்படி செய்யும்; இது,
உண்மையும் உறுதியும் ஆம். அந்தத் தகுதியினால் தொண்டர்கட்கு மிகுதியாகவே அவர்களால் வரும் தீயன யாவும்
நல்லன; அவை நல்லனவே செய்யும்.

தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதி யாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.

11

தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலைகளும், கரும்பின் ஆலைகளும், செந்நெற்பயிர்களும் நிறைந்து, இந்த
வளப்பங்களால் மிகுந்த பொன்வளம் எங்கும் சிறக்கும், நான்முகன் முதற்கண் பூசித்து வழிபட்ட பிரமாபுரம்
என்னும் சீகாழிப் பதியில் அவதரித்து வைதிக ஞானத்தையுடைய திருஞானசம்பந்தன், கோள்களும் நாள்களும்
தொண்டர்களை வருத்தாதவாறு உரைத்த சொல் மாலையாகிய திருப்பதிகத்தை ஓதுகின்ற அடியார்கள் மேலுலகத்தில் அரசராக
ஆளக்கடவர். இது நமது ஆணையாகும்.

திருச்சிற்றம்பலம்

ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி

மகான் ஒளவையார் அருளிய விநாயகர் அகவல் வீடுபேறு அடைவது பற்றியே பேசுவதாகும். இதை ஞானிகள் ஆசி இல்லாமல்
அறிந்துகொள்ள முடியாது. ஞானிகள் திருவடியை பூஜிக்க பூஜிக்கதான் இதில் உள்ள நுட்பங்களை தெரிந்துகொள்ள
முடியும்.

உயிர்க்கொலை தவிர்த்தும் புலால் மறுத்தும் முடிந்த அளவிற்கு ஏழைகளுக்குப் பசியாற்றியும் ஞானிகள்
திருவடியை பூஜித்தும் ஆசிபெறுகின்ற மக்களுக்கு இதில் உள்ள நுட்பங்களை தெரிந்துகொள்ள முடியும். எனவே
ஞானக்கடலாகிய ஒளவையார் திருவடியைப் போற்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும்.

– குருநாதர்

தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்

நிறைவுப்பாடல்

வாழ்கவே வாழ்க என்நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.