குரு உபதேசம் – 3358
உயிர்ப்பலி செய்யாது இருப்பது நல்லது, உயிர் பலியிடும் கோவிலை கண்ணால் கூட காணாதிருப்பதும் நல்லதேயாம், உயிர்ப்பலி இடுவோரை கண்ணால் காண்பதே பாவம் என்றே உணர்ந்து பார்க்க நேரினும் சிரம்தாழ்த்தி பாராதிருந்தால் பாவத்தின் நிழல் நம் மீது படிவதை தவிர்க்கலாம் என்று அறிந்து கொள்வான் முருகனை வணங்கி போற்றுவோர். முருகனை போற்றுவோம்! ஜீவதயவை கடைப்பிடிப்போம்! பணிவுடைய அருணகிரி பாடிய அலங்காரம் கனிவுடன் கற்றிட காணலாம் வீட்டை. ஒளி பெற்ற அருணகிரி ஓதிய அலங்காரம் ஒளி பெறவே கற்பீர் ஓதி உணர்ந்து.
குரு உபதேசம் – 3357
புலால் உண்ணுகின்ற பழக்கத்திலிருந்தும் விடுபடலாம், மது அருந்துகின்ற பழக்கத்திலிருந்தும் விடுபடலாம், சூதாடுகின்ற பழக்கத்திலிருந்தும் விடுபடலாம். கடைத்தேற விரும்புகிறவர் கடைத்தேற்றவல்ல முருகப்பெருமானை வணங்கிட வேண்டுமே அன்றி ஜென்மத்தை கடைத்தேற்ற தடையாயிருந்து வீழ்த்துகின்றதும் பிறவிக்கு காரணமாய் இருக்கின்றதும், மனிதனை கொடும்பாவியாக்குகின்றதுமான உயிர்க்கொலைதனை செய்யாதும், புலால் மறுத்தும் வருவதோடு தெய்வத்தின் பெயரால் உயிர்பலி இடுகின்றதையும் உறுதியாக செய்திடல் ஆகாது.
குரு உபதேசம் – 3356
அகத்தீசன் முதல் அனைத்து சித்தர்களுக்கும் ஆசி தந்து அருள் செய்யக்கூடிய முருகப்பெருமானின் ஆசியைப் பெறலாம். முருகனை போற்றுவோம் முருகன் ஆசியையும் அவன் அளிக்கும் வாசியையும் பெற்று வாழ்வோம். இதம் பெற்ற அருணகிரி இயற்றிய அலங்காரம் பதம் பெறவே கற்பர் பணிந்து. வஞ்சமற்ற அருணகிரி வழங்கிய அலங்காரம் தஞ்சமென்றே போற்றிட தான் அவனாமே.