Prasanna
குரு உபதேசம் – 3391
தவத்திற்கு தலைவனும், ஞானத்திற்கும் தலைவன் முருகபெருமான்தான் என்பதை அறிந்து “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று முருகனை நோக்கி மந்திர ஜெபம் செய்தால், முதன் முதலில் தன்னைப் பற்றி அறியக் கூடிய அறிவு வரும். பொறிபுலன் வழியே செல்லும் மனதை கட்டுப்படுத்தி, தவத்திற்குரிய வைராக்கியத்தை பெறலாம். முருகனின் நாமமே மந்திரம் என்றும், அவன் திருவடியே வேதம் என்றும் அறிகின்ற உண்மைப் பேரறிவும் பெறுவான்.
குரு உபதேசம் – 3390
ஒருவனை பார்க்கும் போதே இவன் தகுதி உடையவனா, தகுதி இல்லாதவனா என்பதை அறியக்கூடிய அறிவைப் பெறலாம். அவ்விதம் முருகன் அருள்கூடி தகுதியுள்ள நட்பை இனம் கண்டு பெருக்கிக் கொள்ளும் வல்லமையையும், ஆற்றலையும் முருகன் அருளால் பெறலாம்.
குரு உபதேசம் – 3389
காமவிகாரமும், லோபித்தனமும், பொறாமையும், பழிவாங்கும் உணர்ச்சியும், சிறுமை குணங்களும்தான் ஒருவனுக்கு தொடர்பிறவிகளை உண்டுபண்ணுகின்றது என்பதை அறிந்து, முருகப்பெருமானின் ஆசியால் குணக்கேடுகளை நீக்கிக்கொண்டு தாய்மை குணத்தையும் பெறலாம். முருகப்பெருமானே தாய்மை குணமென்றும், தாய்மை குணமே முருகப்பெருமான் என்றும் அறியலாம்.