admin
தினம் ஒரு அகவல் 77
77. காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும் ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி காட்சியும் காணாக் காட்சியும் அது தரும் ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி ! இந்த உலகில் கண்களால் காணக்கூடிய பருப்பொருள்களின் வடிவமாகவும், கண்களால் காண முடியாத (ஆன்மா, உயிர்ச்சக்தி) சூட்சும வடிவமாகவும் இருந்து, ஆள்கின்ற அதிகாரமாக விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 76
76. பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய் அரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய் அரிதினும் அரிதாம் அருட்பெருஞ்ஜோதி ! பெரியதிலும் பெரியதாகவும், சிறியதிலும் சிறியதாகவும் இருந்து, அடைவதற்கு அரிதான பொருள்களைக் காட்டிலும் மேலான, மிகமிக அரிதாய் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 75
75. முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும் ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும் ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி ! படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களைச் செய்யும் இறை வடிவங்களான பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகே°வரன், சதாசிவன் போன்றோருக்கு அந்த ஐந்து தொழில்களைச் செய்யும் அதிகாரத்தை அருளும் அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 74
74. சத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும் அத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி சத்திகள் எல்லாம் தழைக்க எங்கெங்கும் அத்தகை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ! பிரபஞ்சத்தை இயக்கும் அனைத்து சக்தி வடிவங்களும் ஆக்கம் பெறவும், செழிக்கவும் உதவுவதற்காக, எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து நின்று, அந்தப் பிரபஞ்ச ஆற்றலாகவே விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 73
73. சத்தர்க ளெல்லாந் தழைத்திட வகம்புறத் தத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம் புறத்து அத்திசை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ! சத்தர்கள் – உண்மைப் பொருளை அறிந்த ஞானிகள். உண்மையைக் கண்டறிந்த ஞானிகள் அனைவரும் (சத்தர்கள்) ஆன்மீகத்தால் செழித்து வாழும்பொருட்டு, உள்ளம், உலகம் மற்றும் எல்லாத் திசைகளிலும் நீக்கமற நிறைந்து பிரகாசிக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 72
72. தாங்ககி லாண்ட சராசர நிலைநின் றாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி தாங்கு அகிலாண்ட சராசர நிலை நின்று ஆங்குற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ! சரம் – இயங்குபவை அசரம் – இயங்காதவை ஆங்குற – பொருந்துமாறு உலகங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டிருக்கின்றவரும், இயங்கும் உயிர்களிலும் (சரம்), இயங்காத பொருள்களிலும் (அசரம்) நிலைபெற்று நின்று, அந்தந்தப் பொருள்களில் அதன் இயல்புக்கேற்பப் பொருந்தி விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 71
71. எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோர் அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி எப்பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய் கண்டோர் அப்பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி ! உண்மைப் பொருளைக் கண்ட ஞானிகள், உலகில் உள்ள எல்லாப் பொருள்களுக்கும் ஆதாரமாக விளங்கும் எந்தப் பரம்பொருளை ‘மெய்ப்பொருள்’ என்று வரையறுத்துக் கூறுவார்களோ, அந்த உண்மைப் பொருளாகி விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 70
70. வல்லதா யெல்லா மாகியெல் லாமும் அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் ஜோதி வல்லதாய் எல்லாமாகி எல்லாமும் அல்லதாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ! எல்லாச் செயல்களையும் செய்ய வல்லமை கொண்டவரும், இந்த உலகில் உள்ள பொருள்கள் எல்லாமே தானாகவே ஆகியுள்ளவரும், அதே சமயம் அந்தப் பொருள்கள் எவற்றுக்கும் உட்படாமல் வேறுபட்டதாய் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


