குரு உபதேசம் 4578
அகத்தீசன் ஆசிபெற்றிட்டால்: ஜீவதயவு பெருகுவதற்கு சைவ உணவே சிறந்தது என்பதை அறியலாம்.
அகத்தீசன் ஆசிபெற்றிட்டால்: ஜீவதயவு பெருகுவதற்கு சைவ உணவே சிறந்தது என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் ஆசியை பெற்றிட்டால்: முனிவர்களுக்கெல்லாம் தலைவன் முருகப்பெருமான்தான் என்று அறிகின்ற அறிவை பெறலாம். நற்றவ முருகனை நாளும் போற்றிட உற்ற தவமது ஓதி உணர்வீர். ஆற்றலாம் முருகனின் அருளைப் போற்றவே ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.
அகத்தீசன் ஆசி பெற்றிட்டால்: ஞானிகளின் திருவடிகளைப் பற்றி பூசிப்பதே உண்மையான பக்தி என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் ஆசியை பெற்றிட: காமதேகத்தின் கசடுகளை நீக்கவும், சிறப்பறிவு பெறவும் முருகப்பெருமான்தான் அருள்செய்வான் என்பதை அறியலாம். பயனுடைய முருகனின் பாதம் பணிந்திட நயனுடைய வாழ்வும் நல்கும் முக்தியே. கருணையே வடிவான கந்தனைப் போற்றிட வருணனும் வந்து வழங்குவான் மழையே. சத்தியவான் முருகனின் தாளைப் போற்றிட நித்திய வாழ்வும் நிலைக்கும் முக்தியே. பரிவுடைய முருகனின் பாதம் போற்றிட செறிவுடைய வாழ்வும் சித்திக்கும் முக்தியே.
அகத்தீசன் ஆசிபெற்றிட: கதிரவனை கருமேகம் மறைப்பது போல் காமதேகம் அறிவை மறைத்து நிற்கும் என்பதை அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கிட: ஒருவனது செயல் மற்ற உயிர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்குமேயானால் அதுவே பிறவித் துன்பத்தை ஒழிக்கும் என்பதை அறியலாம். முக்திக்கு தலைவன் முருகனென்றே அறிந்தபின் பக்தி செலுத்தி பயன்பெறுதல் நலமே!
அகத்தீசனை வணங்கிட: ஒரு செயல் செய்தால் அந்த செயல் தனக்கும் தன்னை சார்ந்தவர்க்கும், தனது ஊருக்கும், தனது நாட்டிற்கும், உலகத்திற்கும் நன்மை தரக்கூடியதான செயலை செய்வதே சிறந்த அறிவு என்று உணர்தலும், எந்த செயல் எல்லோருக்கும் பயனளிக்கும் என்பதை ஆராய்ந்து செயல்படுகின்ற அறிவையும் பெறலாம்.
முருகனை வணங்கிட: மும்மலக் குற்றத்தாலான தேகமே தொடர் பிறவிக்கு காரணமாய் உள்ளதை அறிந்து முதன் முதலில் மும்மலக்குற்றத்தை நீக்கிக் கொண்டு ஒளிதேகம் பெற்றவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம். பற்றற்ற முருகனின் பாதம் பணிந்திட குற்றமற்ற வாழ்வும் நற்குணமும் உண்டாம்.