admin
தினம் ஒரு அகவல் 84
84. சிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழி லைந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி சிந்தையில் துன்பு ஒழி சிவம் பெறுக எனத் தொழில் ஐந்தையும் எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி ! மனதில் உள்ள எல்லாத் துன்பங்களையும் முற்றிலுமாக நீக்கி, “நீயே சிவத்தின் நிலையைப் பெறுவாய்” என்று ஆணையிட்டதோடு, பிரபஞ்சத்தின் ஐந்து தொழில்களையும் எனக்குச் செய்ய அருளிய அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 83
83. எண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென அண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி எண்ணில் செழும் தேன் இனிய தெள் அமுது என அண்ணித்து இனிக்கும் அருட்பெருஞ்ஜோதி ! நினைத்துப் பார்க்கும்பொழுதே செழுமையான தேனின் சுவையை அளிப்பவராகவும், இனிமையான, தெளிந்த அமிர்தத்தைப் (சாகாவரம் தரும் அமிர்தம்) போலவும் விளங்கி, என்னை நெருங்கி வந்து எப்போதும் இனிமையாய் உள்ள அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 82
82. மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீ அது ஆயினை என்று அருள் அருட்பெருஞ்ஜோதி ! மேயினை – பொருந்துதல் எனக்குள் பொருந்தி, உண்மைப் பரம்பொருளாய் வெளிப்பட்டு, “நீயே நானாகி விட்டாய்!” என்று எனக்கு உபதேசித்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 81
81. எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்று எனை அண்ணி உள் ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி ! மனத்தில் நினைத்த எல்லாவற்றையும், நினைத்தபடியே செய்து முடிப்பாய் என்று எனக்கு ஆணையிட்டு, என்னை நெருங்கி (அண்ணி) வந்து என் உள்ளத்திலேயே உயர்ந்து பிரகாசமாக விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 80
80. நானந்த மில்லா நலம்பெற வெனக்கே ஆனந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி நான் அந்தம் இல்லா நலம் பெற எனக்கே ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ்ஜோதி ! முடிவில்லாத நிலைத்த நற்பலன்களைப் பெறும்பொருட்டு, எனக்கு பேரானந்தத்தை அள்ளி வழங்கியருளிய அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 79
79. இறவா வரமளித் தென்னைமே லேற்றிய அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி இறவா வரம் அளித்து என்னை மேலேற்றிய அறவாழியாம் தனி அருட்பெருஞ்ஜோதி ! அறவாழி (அறம் + ஆழி) – அறக்கடல் பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியிலிருந்து விடுபட்டு, சாகாவரம் அளித்து, என்னையும் உயர்ந்த ஞான நிலைக்கு உயர்த்தியருளியவரும், தனிச் சிறப்பு வாய்ந்த அறக் கடலாகவே (அறவாழி) விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 78
78. இன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென் றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி இன்புறு சித்திகள் எல்லாம் புரிக என்று அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி ! உண்மையான நிலைத்த இன்பத்தை அளிக்கக்கூடிய சித்திகள் (ஆற்றல்கள்) அனைத்தையும் செய்து பயன்பெறலாம் என்று, பேரன்புடன் எனக்கு அருளிய அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 77
77. காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும் ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி காட்சியும் காணாக் காட்சியும் அது தரும் ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி ! இந்த உலகில் கண்களால் காணக்கூடிய பருப்பொருள்களின் வடிவமாகவும், கண்களால் காண முடியாத (ஆன்மா, உயிர்ச்சக்தி) சூட்சும வடிவமாகவும் இருந்து, ஆள்கின்ற அதிகாரமாக விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


